இந்திய பகுதிக்குள் அத்து மீறி ஊடுருவிய சீன ராணுவம்: 10 நாட்களாக தொடர்ந்து பதற்றம்

இந்திய பகுதிக்குள் அத்து மீறி ஊடுருவிய சீன ராணுவம்: 10 நாட்களாக தொடர்ந்து பதற்றம்
Updated on
1 min read

இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, அங்குள்ள இந்திய ராணுவ வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் 10 நாட்களாக பதற்றம் நீடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 10 நாட்களாக சிக்கிம் மாநிலத்தில் உள்ள டோகா லா பகுதியில் உள்ள எல்லை வழியாக சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் அத்துமீறி ஊடுருவி உள்ளனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள், சீன வீரர்கள் மேலும் முன்னேறி வருவதைத் தடுப்பதற்காக கடுமையாக போராடி உள்ளனர்.

இதற்காக, எல்லை கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் மனித சுவர் அமைத்து சீன வீரர்களை நமது வீரர்கள் தடுத்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை சிலர் புகைப்படமாகவும் வீடியோ காட்சியாகவும் பதிவு செய்துள்ளனர்.

டோகா லா பகுதிக்கு அருகே லால்டன் பகுதியில் உள்ள 2 பதுங்கு குழிகளையும் சீன வீரர்கள் அழித்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும் கைலாஷ் மானசரோவருக்கு செல்ல முற்பட்ட இந்திய யாத்ரீகர்களை சீன வீரர்கள் தடுத்து நிறுத்தியதாகவும் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் கொடி அமர்வு கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தினர். ஆனாலும் இன்னும் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

சிக்கிம்-பூடான்-திபெத் பகுதிகளை ஒருங்கிணைக்கும் டோகா லா பகுதியில் இதுபோன்ற ஊடுருவல் நடைபெறுவது முதல் தடவை அல்ல. இதற்கு முன்பு கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே பகுதியில் ஊடுருவிய சீன ராணுவ வீரர்கள், அங்கிருந்த நமது ராணுவத்தின் பதுங்கு குழிகளை அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in