

உத்திர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. வன்முறை சம்பவத்திற்கு 3 பேர் பலியாகினர்.கலவரத்தில் ஈடுபட்டதாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலம், முசாபர் நகரில், கடந்த மாதம்(செப்டம்பர்), 6 மற்றும் 7ம் தேதிகளில், இரு பிரிவினர் இடையே வகுப்பு கலவரம் ஏற்பட்டது. மிகப் பெரிய அளவில் நிகழ்ந்த, இந்தக் கலவரத்தில், 62 பேர் உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில், இந்த கலவரம் நடந்தது.
இந்நிலையில், முசாபர் நகர் மாவட்டத்தில், புதானா மாவட்டத்தில் மீண்டும் வகுப்புக் கலவரம் வெடித்துள்ளது. நேற்றிரவு நடந்த கலவரத்தில், 3 பேர் பலியாகியுள்ளனர்.
இது குறித்து முசாபர் நகர் போலீஸ் உயர் அதிகாரி எச்.எம்.சிங் கூறுகையில், முகமதுபுரைசிங் கிராமத்தில் அஃப்ரோஸ்(20), மெஹெர்பான்(21),அஜ்மல்(22) ஆகிய இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
பலியான 3 இளைஞர்களும் கடந்த மாதம் நடந்த கலவரத்திற்குப் பின்னர் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.