

டெல்லியில் மெர்சிடிஸ் கார் மோதி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக, சிறுவனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரணை நீதிமன்றத்துக்கு மாற்றி சிறார் நீதி வாரியம் (ஜேஜேபி) உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி சித்தார்த் சர்மா என்பவர் சாலையைக் கடக்க முயன்றபோது வேகமாக வந்த மெர்சிடிஸ் கார் மீது மோதி பலியானார். போலீஸார் நடத்திய விசாரணையில், தனது தந்தையின் காரை அதிவேகத்தில் (மணிக்கு 80 கி.மீ.) ஓட்டி வந்த 17 வயது சிறுவன் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
விபத்து நடந்த நான்கு நாட்களுக்கு பிறகு சிறுவன் போலீஸில் சரண் அடைந்தான். இவன் மீது சிறார் நீதி வாரியத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. தற்போது ஜாமீனில் உள்ள சிறுவனுக்கு எதிராக கடந்த மே 26-ம் தேதி டெல்லி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதில் கொலை செய்யும் நோக்கமற்ற, மரணம் விளைவிக்கும் குற்றம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
இதற்கிடையே, சிறார் நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது போலீஸார் சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் அடுல் வாஸ்தவா வாதாடினார். அப்போது, “விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் வயது 16 முதல் 18-க்குள் இருப்பதாலும், அவர் செய்த குற்றம் மிகக் கொடியது என்பதாலும் இந்த வழக்கை புதிய சட்டத்தின்படி சிறார் நீதிமன்றத்தில் இருந்து விசாரணை நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட சிறார் நீதி வாரியம், சிறுவன் மீதான வழக்கை விசாரணை நீதிமன்றத்துக்கு மாற்ற நேற்று உத்தரவிட்டது.
டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். குற்றவாளிகளில் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவர் என்பதால் சிறார் நீதி சட்டத்தின்படி அவருக்கு 3 ஆண்டு மட்டுமே சிறை தண்டனை விதிக்கப் பட்டது. இதையடுத்து, சிறார் நீதி (சிறுவர் நலன் மற்றும் பாதுகாப்பு) சட்டத்தில் கடந்த ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது.
இதன்படி, கொலை, பலாத்காரம் உள்ளிட்ட கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களையும் வயது வந்தோராகக் கருதி விசாரணை நீதிமன்றத்தில் விசாரிக்க முடியும். இந்தத் திருத்தத்துக்குப் பிறகு 18 வயதுக்குட்பட்ட சிறுவன் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவது இதுவே முதல்முறை.