Last Updated : 03 Aug, 2016 09:37 AM

 

Published : 03 Aug 2016 09:37 AM
Last Updated : 03 Aug 2016 09:37 AM

பூலான் தேவி சிலை வைக்க அனுமதி மறுப்பு: உத்தரப் பிரதேச கிராமத்தில் பதற்றம்

உ.பி.யில் பூலான் தேவி சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்ட தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் சம்பல் கொள்ளையர்களுக்கு சிலை வைக்கும் முயற்சியில் அவர்களது சமூகத்தினர் கடந்த ஓராண்டாக தீவிரம் காட்டி வருகின்றனர். சம்பல் கொள்ளையர்களில் ஒருவரான தத்துவாவிற்கு உ.பி.யின் பதேபூரில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி சிலை வைக்கப்பட்டது. அவர் சார்ந்த குர்மி சமூகத்தினரால் அரசு எதிர்ப்பை மீறி தத்துவாவின் சிலை வைக்கப்பட்டது.

அந்தவகையில், சம்பல் கொள்ளைக்காரியும், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான பூலான் தேவிக்கு அவரது நினைவு நாளான நேற்று சிலை வைக்க முயற்சிக்கப்பட்டது.

பூலான் சார்ந்துள்ள நிஷாத் (படகோட்டி) சமூகத்தினரை கொண்ட ‘நிஷாத் விகாஸ் சங்’ என்ற அமைப்பு இதற்கான முயற்சியில் ஈடுபட்டது. இதற்காக கிழக்கு உ.பி.யின், கோரக்பூர் மாவட்டம், பக்கா கதா என்ற கிராமத்தில் பஞ்சாயத்து நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் சிலை வைக்க முன் அனுமதி பெறவில்லை என மாவட்ட நிர்வாகம் மறுத்து விட்டது. அத்துடன் இவர்களிடம் இருந்த 20 அடி உயர சிலையும் பறி முதல் செய்யப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நிஷாத் விகாஸ் சங் அமைப்பின் தலைவர் லவுதன் ராம் நிஷாத், ‘தி இந்து’விடம் கூறும்போது, “உ.பி.யில் எங்கள் சமூத்தினர் 4.5 சதவீதம் இருந்தும் எந்த அரசியல் கட்சியும் எங் களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வில்லை. எனவே நிஷாத் சமூகத் தினரின் ஒற்றுமையை வலுப்படுத்த பூலான் தேவிக்கு சிலைகள் வைக்க முடிவு செய்தோம். இதற்கு அனு மதி கிடைக்கவில்லை எனில் மாநிலம் முழுவதிலும் போராட்டத் தில் ஈடுபடுவோம்” என்றார்.

பூலான் தேவி கொலை செய்யப் பட்டது முதல் நிஷாத் சமூகத்தினர் தங்களுக்கு அரசியல் அடையாளம் பெற முயன்று வருகின்றனர். இந்நிலையில் உ.பி.யில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் பூலான் தேவிக்கு மாநிலம் முழுவதிலும் 11 சிலைகள் வைக்க நிஷாத் விகாஸ் சங் முடிவு செய்துள்ளது.

உ.பி.யின் கான்பூர் அருகே உள்ள பேமாய் கிராமத்தைச் சேர்ந் தவரான பூலான் தேவி, அங்கு வாழ்ந்த தாக்கூர் சமூகத்தினரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்க முடிவு செய்த பூலான் தேவி, சம்பல் கொள்ளையர் களுடன் சேர்ந்தார். கடந்த 1981-ல் தாக்கூர் சமூகத்தினர் 22 பேரை சுட்டுக் கொன்றார். ம.பி. முதல்வ ராக இருந்த அர்ஜுன்சிங்கிடம் பூலான் தேவி சரணடைந்து 11 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

இவர் மீது உ.பி.யில் இருந்த வழக்குகளை அப்போதைய முதல்வர் முலாயம் சிங் வாபஸ் பெற்றார். மேலும் பூலான் தேவியை சமாஜ்வாதி கட்சியில் சேர்த்து எம்.பி. ஆக்கினார். பூலான் தேவி, கடந்த 2001-ல் டெல்லியில் உள்ள அரசு வீட்டில் சுட்டுக் கொல்லப் பட்டார். ஷேர்சிங் ராணா என்பவர் இவரை சுட்டுக்கொன்றார். தாக்கூர் சமூகத்தினரைக் கொன்றதற்கு பழி தீர்க்கவே பூலான் தேவியை சுட்டதாக இவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x