Published : 28 Nov 2013 12:00 AM
Last Updated : 28 Nov 2013 12:00 AM

மும்பை உளவாளிதான் பயங்கரவாதிகளுக்கு உதவினார் - ராம் பிரதான்

மும்பையில் 26.11.2008-ல் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலின்போது, நிர்வாகம் அதை எப்படி எதிர்கொண்டது என்பதை அறிய முன்னாள் உள்துறைச் செயலர் ராம் பிரதான் தலைமையில் ‘இருவர் குழு’ நியமிக்கப்பட்டது. மும்பையிலேயே இருந்த உளவாளி, பயங்கரவாதிகளுக்கு உதவியிருக்கலாம் என்று அந்தக் குழு அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திடம் தெரிவித்தது. அந்தத் தகவல் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ராம் பிரதானுக்குத் தெரியவில்லை. ‘ஐ.பி.’, ‘ரா’ போன்ற மத்திய உளவு அமைப்புகள் ராம் பிரதான் குழுவுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இவை தொடர்பாக ‘தி இந்து’ நிருபர் பிரியங்கா ககோட்கருக்கு ராம் பிரதான் அளித்த பேட்டியின் சுருக்கம் இது.

மும்பையில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து இரண்டு பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் எழுதிய ‘முற்றுகை’ (தி சீஜ்) என்ற நூலில் ‘இந்தியப் பாதுகாப்பு முகமையிலேயே ஒரு உளவாளி இருந்தார்’ என்று தெரிவித்துள்ளனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

உள்ளூர் ஆதரவு இல்லாமல் கசாபும் அவனுடைய சகாக்களும் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க முடியாது என்பதில், அறிக்கையைத் தயார்செய்தபோது எங்களுக்கு எந்தச் சந்தேகமும் ஏற்படவில்லை. மகாராஷ்டிர அரசுடனான கடிதத்தில் இதை நான் தெரிவித்திருக்கிறேன். அதற்கும் மேலாக - முதல்முறையாக நான் இதைச் சொல்கிறேன் - அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் கவனத்துக்கும் இதை நான் கொண்டுசென்றிருக்கிறேன். மும்பையில் இருந்த உளவாளிதான் பயங்கரவாதிகளுக்கு உதவியிருக்கிறார் என்று நாங்கள் கருதியது ஏன் என்ற விளக்கக் குறிப்பையும் அவருக்கு அளித்திருக்கிறேன். போதிய தகவல்களை அளித்து, இந்த விவகாரத்தை உடனடியாக விசாரித்து உளவாளியை எவ்வளவு விரைவில் கண்டுபிடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் கண்டுபிடியுங்கள் என்று கூறியிருந்தோம். அந்தப் பரிந்துரை என்ன ஆனது என்று தெரியாது. இப்போது எல்லோருடைய புத்தகங்களிலும் அறிக்கைகளிலும் அது இடம்பெற்றுவருகிறது. ஹெட்லிகூட தன்னுடைய வாக்குமூலத்தில் இதைத் தெரிவித்திருக்கிறார். அவரே ஒரு உளவாளிதான். இப்போது இந்தத் தகவல் செய்தித்தாள்கள் வழியாகவும் இதர ஊடகங்கள் வாயிலாகவும் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. தாக்குதல் நடந்த மூன்று மாதங்களுக்கெல்லாம் நாங்கள் அறிக்கை அளித்துவிட்டோம். உளவாளி அல்லது உளவாளிகளை அடையாளம் காண்பதில் இத்தனை மெத்தனம் ஏன் என்பதே என்னுடைய கேள்வி.

இந்த உளவாளி குறித்து நீங்கள் விவரங்கள் அளித்தீர்களா?

நாங்கள் குறிப்பாக அளித்த சில தகவல்களைக் கொண்டு உளவாளியை அடையாளம் கண்டிருக்க முடியும். இதைத் தவிர வேறு எதையும் நான் கூற விரும்பவில்லை. சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டபடியால், அனைத்தும் என்னுடைய நினைவில் அப்படியே இருப்பதாகக் கூற முடியாது. ஆனால், 20 வரிகளுக்குள்ளாக இந்த உளவாளி குறித்து நான் குறிப்பு தயாரித்திருந்தேன். நாங்கள் அளித்த அந்தக் குறிப்பில் எல்லா விவரங்களும் இருந்தன.

நீங்கள் அறிக்கையில் அளித்த பரிந்துரைகள்மீது மகாராஷ்டிர அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உங்களுக்குத் திருப்தி ஏற்பட்டிருக்கிறதா?

எங்களுடைய அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகள் முழுதாக அமல்படுத்தப்பட்டுவிட்டதாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் கூறினார் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அது சரியல்ல என்பதுதான் என்னுடைய பதில். எங்களுடைய பரிந்துரைப்படி எது செய்யப்பட்டது, எவை செய்யப்படவில்லை என்பதை மக்கள் அறியும் வகையில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

அறிக்கை தயாரித்தபோது நீங்கள் கேட்ட ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைத்ததா?

எங்களுடையது விசாரணை கமிஷன் அல்ல, நிர்வாகரீதியாக அமைக்கப்பட்ட குழு. அதிகாரிகள் அனைவரும் எங்கள் முன் வந்து, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்று கூறும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அப்படியிருந்தும் மகாராஷ்டிர மாநில அரசு அதிகாரிகளில் நாங்கள் அழைத்த அனைவரும் வந்து ஒத்துழைத்தனர். மத்தியப் புலன் விசாரணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அப்படிச் செய்யவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அது ஏன் என்ற காரணம் அவர்களுக்கே தெரியும். பலமுறை கேட்டும் மத்தியப் புலனாய்வு அமைப்புகள் எங்களுக்குத் தகவல்கள் எதையும் அளிக்கவில்லை. அதுபோக, நாங்கள் நிர்வாகரீதியான செயல்களை மட்டும் விசாரிக்க வேண்டும் என்ற வரம்பு விதிக்கப்பட்டிருந்தது. மாநில முகமைகளுக்கு அப்பால், மற்றவை என்ன செய்தன என்று விசாரிக்க எங்களுக்கு அதிகாரமில்லை. மத்திய அரசின் தலையீட்டின் பேரிலேயே மத்தியப் புலனாய்வு அமைப்புகள் எங்களுடைய விசாரணை வரம்பிலிருந்து விலக்கிவைக்கப்பட்டன. மூன்று மாத அவகாசம் மட்டுமே தரப்பட்டு, அதற்குள் அறிக்கை தருமாறு நாங்கள் அறிவுறுத்தப்பட்டோம். சம்பிரதாயத்துக்குத் தரும் அறிக்கையாக எங்களுடையது இருக்கக் கூடாது என்று நினைத்தோம். உடனடியாகப் படித்துப்பார்த்துச் செயல்படுத்தும் வகையில் பரிந்துரைகள் இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே தயாரித்தோம்.

பாதுகாப்பை மேம்படுத்த, பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி காட்சிகளைப் படம் பிடிக்க வேண்டும், தேவைப்படும் நேரத்தில் போலீஸார் அவற்றைப் பெற்று குற்றவாளிகளைப் பிடிக்க உதவ வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தீர்கள். உங்கள் பரிந்துரையை அமல்படுத்தியிருக்கும் விதம் திருப்தியாக இருக்கிறதா?

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்தபிறகு, அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை ஆய்வுசெய்ததன் அடிப்படையில் நாங்கள் பரிந்துரைகளை அளித்திருந்தோம். அமெரிக்காவில் உடனே எங்கெல்லாம் கண்காணிப்பு கேமராக்கள் இல்லையோ அங்கெல்லாம் பொருத்திவிட்டார்கள். பயங்கரவாதச் செயல்களைத் தடுக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்கள் அனைவரிடமும் இருந்தது. அவர்களிடம் பண வசதி இருக்கிறது நம்மிடம் இல்லை என்று எங்களுக்குத் தெரியும்.

அதனால்தான் எல்லா இடங்களிலும் இல்லாவிட்டாலும், மக்கள் அதிகம் வந்துபோகும் ரயில் நிலையம், பேரங்காடிகள் போன்றவற்றில் நிறுவ வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தோம். மும்பையில் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை செய்தித்தாள்களில் படித்தோம். ஆனால், அவை போதுமானவை அல்ல. அரசின் நிர்வாக நடைமுறைகள், பொது ஏலம் மூலம்தான் பொருள்களைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதிகள் இதற்குக் காரணங்களாக இருக்கலாம். ஆனால், இது போன்ற சந்தர்ப்பங்களில் அமைச்சர்கள் முன்வந்து பொதுநலனில் அக்கறைகொண்டு இவற்றுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

மும்பை போலீஸாரிடம் போதிய ஆயுதங்களும் கருவிகளும் இல்லையென்று அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். இதில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதுகிறீர்களா?

குண்டுகள் இல்லாததால் ஆண்டுக்கு ஒரு முறைதான் மகாராஷ்டிர போலீஸாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியே தரப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தோம். போலீஸார் துப்பாக்கிகளையே லத்திகளைப் போலத்தான் கையில் வைத்திருக்கிறார்கள். குண்டுதுளைக்காத சட்டைகள் என்று அவர்களுக்குத் தரப்பட்டிருப்பவை உண்மையிலேயே குண்டுகளால் துளைக்க முடியாதவை அல்ல. இப்போதும் நிலைமையில் மாறுதல் ஏற்படவில்லை என்பதையே ஊடகங்கள் வாயிலாக அறிகிறேன். இது உண்மை என்றால் இவற்றில் எல்லாம் நிர்வாகம் அலட்சியமாக இருக்கிறது என்றுதான் பொருள்.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x