சர்வதேச யோகா தினத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் வேண்டுகோள்

சர்வதேச யோகா தினத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் வேண்டுகோள்
Updated on
1 min read

‘‘சர்வதேச யோகா தினத்தை மாபெரும் இயக்கமாக உருவாக்க வேண்டும்’’ என்று மக்களுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படு கிறது. இதையொட்டி உத்தர பிரதேச மாநிலம் கோரக்நாத் மடத்தில் யோகா பயிற்சி முகாமை, முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

வேதங்களிலும் மற்ற பல பண்டைய நூல்களிலும் யோகாவின் முக்கியத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச அங்கீகாரத்தை வாங்கிக் கொடுத்து பிரதமர் நரேந்திர மோடி சாதனை செய்துள்ளார். சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

சர்வதேச யோகா தினம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். ஏனெனில், மிக பழைமையான யோகாவினால் பல பயன்கள் கிடைக்கின்றன. அதை உலக மக்கள் தற்போது விரும்பத் தொடங்கி விட்டனர்.

வரும் 21-ம் தேதி கோடிக் கணக்கான மக்கள் யோகாவுடன் தங்களை இணைத்துக் கொள்ள உள்ளனர். அன்றைய தினம் 200-க்கும் மேற்பட்ட நாட்டு மக்கள் யோகா முறைகளைச் செய்ய உள்ளனர்.

அன்று லக்னோவில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளது உத்தரபிரதேசத்துக்குப் பெருமையான விஷயம். இவ்வாறு முதல்வர் ஆதித்யநாத் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in