Published : 13 Dec 2013 06:57 PM
Last Updated : 13 Dec 2013 06:57 PM

ஹசாரே - ஆம் ஆத்மி இடையே மீண்டும் கருத்து மோதல்

அன்னா ஹசாரேவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் கருத்து வேறுபாடு நிலவிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ரலேகான் சித்தியில் தனது உண்ணாவிரதப் பந்தலில் இருந்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகியை அன்னா ஹசாரே கிராமத்தை விட்டே வெளியேறச் சொன்னதால் அங்கு பரபரப்பு நிலவியது.

ஜன லோக்பால் மசோதாவை உடனே நிறவேற்றக் கோரி, அன்னா ஹசாரே, தனது சொந்த ஊரான ரலேகான் சித்தியில் உண்ணாவிரம் மேற்கொண்டுள்ளார். அவருடன் இன்னும் பலரும் அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவரான முன்னாள் ராணுவத் தலைமை தளபதி வி.கே.சிங்குடன் அங்கு இருந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி ராய் விவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பொறுமையிழந்த ஹசாரே, ராய் அந்த கிராமத்திலிருந்து வெளியேறுமாறு மைக்கில் கூறினார்.

முன்னதாகப் பேசிய வி.கே.சிங், "ஆம் ஆத்மி தலைவர்கள் ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரேவை தனியாக விட்டு விட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளனர். ஹசாரே அவர்கள் ஜன லோக்பாலுக்காக குரல் கொடுக்கும் போது அவர் பின்னால் வந்தவர்கள் எல்லாம், காந்தியவாதியான அவரை ஏமாற்றிவிட்டு சென்று விட்டனர். அப்படி பிரிந்து போனவர்கள், அவர்களால்தான் ஹசாரே இந்த நிலையில் இருப்பதாக பெருமைப்படுகின்றனர். ஆனால் அன்னா உருவாக்கிய இந்த இயக்கத்தை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இன்று நம் தேசத்தை முன்னேற்ற வேண்டும் என்றால் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இப்படித் தனித்தனியாக பிரிந்து போகக் கூடாது" என்றார்.

இதை கூட்டத்தில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த ராய், வி.கே.சிங் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ஏஜெண்டாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஆரம்பித்தது. பொறுமையிழந்த ஹசாரே, "உங்களை இந்த உண்ணாவிரத்திற்கு வர வேண்டாம் என சொல்லியும் கேட்காமல் வந்திருக்கிறீர்கள். இப்போது வி.கே சிங் பேசும் போது குறுக்கே பேச வேண்டாம் என மக்கள் கேட்கின்றனர் ஆனால் குறுக்கிடுகிறீர்கள். இப்படி பிரச்சினையை உருவாக்குவதற்கு பதிலாக இந்த கிராமத்தை விட்டு செல்லுங்கள். இங்கு உட்கார வேண்டாம்" என ராயைப் பார்த்துக் மைக்கில் கூறினார். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ராய். ஜன லோக்பாலுக்கு எதிரான சிலர் ஹசாரேவை தவறான வழியில் நடத்துவதாகக் கூறினார். மேலும், "ஜன லோக்பாலுக்கான உண்ணாவிரதத்தில் துரோகத்தைப் பற்றி பேசுகின்றனர். அதுவும், தேர்தலில் போட்டியிட மோடியின் பின்னால் அலைந்து கொண்டிருப்பவர் இதைச் சொல்கிறார் ஏனென்றால் ஹசாரேவுடன் நாங்கள் ஒற்றுமையாக இருப்பது அவருக்கு பிடிக்கவில்லை. அன்னா இதிலிருந்து மீண்டு தெளிவான முடிவினை எடுப்பார் என நம்புகிறோம். இப்போது கூட இந்த கிராமத்தை விட்டுதான் செல்கிறேன். அன்னாவை விட்டு அல்ல. எனது உண்ணாவிரதத்தை டெல்லியில் தொடருவேன்" என்றார்.

உண்ணாவிரத்திற்கு ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி அதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் கேஜ்ரிவாலும் ஹசாரேவிடம் பேசி, தான் வர இயலாததை தெரிவித்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டதாக வாங்கியதாக செய்திகள் வந்திருந்தன.

ஒரு வீடியோ பதிவில் ஊழலுக்கு எதிரான இயக்கத்திற்கு திரட்டப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததைக் குறித்து அன்னா ஹசாரே வருத்தம் தெரிவித்திருந்தார். இதற்கு பிறகே ஹசாரேவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்குமான பிரச்சினை ஆரம்பமாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x