

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய தங்கம், வைரம், வெள்ளி நகைகளை சென்னையில் இருந்து பெங்களூருக்கு கொண்டு வருவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா ஒத்திவைத்து சனிக்கிழமை உத்தரவிட்டார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் 17 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் முதல் கட்ட விசாரணையின்போது ஜெயலலிதாவிடம் இருந்து தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் மற்றும் ஏராளமான அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை தற்போது சென்னையில் உள்ள அரசு கருவூலத்திலும் மத்திய ரிசர்வ் வங்கியிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
'சென்னையில் இருக்கும் ஜெயலலிதாவின் அசையும் சொத்து களை வழக்கு நடைபெறும் பெங்களூ ருக்கு கொண்டுவர வேண்டும்' என திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் சார்பாக திமுக எம்.பி.தாமரைச்செல்வன் கடந்த ஆகஸ்டில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அம்மனுவை விசாரித்த நீதிபதி டி குன்ஹா, "வழக்கில் தொடர்புடைய 1066 சான்று பொருள்களையும் பெங்களூருக்கு பாதுகாப்பாக கொண்டு வர வேண்டும். அதற்கான சட்ட மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை டிசம்பர் 21-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்'' என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற பதிவாளருக்கு கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி டி'குன்ஹா முன்னிலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஆஜராகவில்லை. ஜெயலலிதாவின் வழக்குரைஞர் பி.குமாரும் சசிகலாவின் வழக்குரைஞர் மணிசங்கரும்கூட ஆஜராகவில்லை. ஆனால் அரசு தரப்பு வழக்குரைஞர் பவானி சிங்கும் அன்பழகனின் சார்பாக தாமரைச்செல்வன் எம்.பி.யும் ஆஜராகினர்.
அப்போது பேசிய நீதிபதி, "சென்னை மத்திய ரிசர்வ் வங்கியிலும் அரசு கருவூலத்திலும் இருக்கும் ஜெயலலிதாவின் அசையும் சொத்துகளை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு கொண்டு வருவதில் நிறைய நடைமுறை சிக்கல் இருக்கிறது. அதற்கான நீதிமன்ற நடைமுறைகளும் பாதுகாப்பு ரீதியான காவல்துறையின் வசதிகளும் இன்னும் முழுமை அடைய வில்லை. மேலும் இந்த நகைகளை பாதுகாக்கும் அதிகாரம் சென்னை சிங்காரவேலர் மாளிகையில் செயல்பட்டு வந்த தனி நீதிமன்றத்தின் வசம் இருக்கிறது. அவர்களுக்கு வருகிற 6-ம் தேதிதான் கடிதம் எழுத இருக்கிறோம்.
அதுமட்டுமில்லாமல் ஜனவரியில் நிறைய விடுமுறை நாள்கள் இருப்பதால், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன். அன்றுமுதல் சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை தினமும் தொடர்ந்து நடைபெறும்'' என்றார்.
அதற்கு அரசு வழக்குரைஞர் பவானி சிங், '' ஜனவரி 20-ம் தேதி எனது இறுதி வாதத்தை ஆரம்பிக்கிறேன்'' என்றார். இதனைத் தொடர்ந்து அன்பழகனின் வழக்குரைஞர் தாமரைச் செல்வன் எம்.பி., "ஏற்கெனவே பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் எங்களுக்கு இவ்வழக்கில் எழுத்து பூர்வமாக வாதிட அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி நாங்களும் இறுதி வாதத்தை முன்வைப்போம்'' என்றார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற பதிவாளர் சென்னையில் இருக்கும் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையின் இயக்குநருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "சென்னையில் உள்ள நகைகள் உள்ளிட்ட பரிசு பொருள்களை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பெற்றுக் கொள்ளும்போது உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். சென்னையில் இருந்து பெங்களூர் கொண்டு செல்லும் வழியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள அதிகாரியின் தலைமையில் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 12-ம்தேதி சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையின்போது நீதிபதி டி குன்ஹா, "டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் ஜெயலலிதாவின் அனைத்து நகைகளையும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்" என உத்தரவிட்டதாக பரவலாக செய்திகள் வெளியாயின.
'தி இந்து’ இதழ் மட்டுமே நீதிபதி டி குன்ஹா, "டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்புடைய அசையும் சொத்துகளை சென்னையில் இருந்து பெங்களூர் கொண்டு வருவதற்கான நீதிமன்ற நடைமுறைகளை முடிக்க வேண்டும்" என உத்தரவிட்டார் என சரியான செய்தியை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.