ஜனவரி 31-ல் கூட்டத்தொடர் தொடக்கம்: பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் - தனியாக ரயில்வே பட்ஜெட் இருக்காது

ஜனவரி 31-ல் கூட்டத்தொடர் தொடக்கம்: பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் - தனியாக ரயில்வே பட்ஜெட் இருக்காது
Updated on
1 min read

வரும் 31-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடரை கூட்டவும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இனிமேல் ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட மாட்டாது. இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்களுக் கான மத்திய அமைச்சரவை குடியரசுத் தலைவருக்கு நேற்று பரிந்துரை செய்துள்ளது.

பொதுவாக பிப்ரவரி கடைசி வாரத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். அதே மாதம் கடைசி நாளுக்கு முந்தைய நாளில் ரயில்வே பட்ஜெட்டும் கடைசி நாளில் பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதனால் பட்ஜெட் நடைமுறைகள் அனைத்தும் மே மாதத்தில்தான் முடிவடையும்.

இதன் காரணமாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் செலவினங்கள் மற்றும் வரி நடைமுறைகளை நிதி யாண்டின் தொடக்கமான ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்த முடியாத நிலை இருந்தது.

இதையடுத்து, சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த பட்ஜெட் நடைமுறையை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி பட்ஜெட்டை வழக்கத்துக்கு மாறாக ஒரு மாதம் முன்கூட்டியே தாக்கல் செய்யவும், ரயில்வே பட்ஜெட்டை தனியாக தாக்கல் செய்யாமல் பொது பட்ஜெட்டுடன் இணைக்கவும் மத்திய அமைச் சரவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவு செய்தது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லி யில் நேற்று நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற விவகாரங்களுக் கான அமைச்சர் அனந்த் குமார், இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 31-ம் தேதி கூட்டவும் பிப்ரவரி 1-ம் தேதி 2017-18 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குடியரசுத் தலைவர் உரையும் பொருளாதார ஆய்வறிக் கையும் கூட்டத் தொடரின் முதல் நாளான ஜனவரி 31-ம் தேதியே இடம்பெறும் என எதிர்பார்க் கப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறும். இரண்டாம் பகுதியை மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in