

விலங்குகள் மீது பரிசோதனை செய்யப்பட்ட அழகு சாதனப் பொருட்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக் குறித்த உத்தரவு விரைவில் வெளியாக உள்ளது.
இதன் மூலம் தெற்கு ஆசியாவில் விலங்குகள் மீது பரிசோதனை செய்யப்படும் அழகு சாதனப் பொருட்கள் அற்ற நாடு என்ற நிலையை இந்தியா அடையும்.
இந்த தடைக் குறித்து விலங்குகளுக்கான மனிதர்கள் என்ற தன்னார்வு அமைப்பைச் சேர்ந்த நோர்மா அல்வார்ஸ் 'தி இந்து'- விடம் கூறும்போது, "சமீபத்தில் இந்திய ஆய்வகங்களில் விலங்குகள் மீது அழகு சாதனப் பொருட்களின் பரிசோதனை நடத்த தடை விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விலங்குகளின் நலன்களில் அக்கறை செலுத்தும் அமைப்புகளின் முயற்சியால் தற்போது விலங்குகள் மீது பரிசோதனை செய்யப்பட்ட அழகு சாதனப் பொருட்களின் இறக்குமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவு எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இனங்களை காக்கும் நடவடிக்கைகளில் அரசு, நுகர்வோர் மற்றும் தொழில்த்துறை நிறுவனங்கள் ஒத்துழைத்தால் மட்டுமே இத்தகைய முயற்சி சாத்தியமாகும்" என்றார்.
இந்த தடை தொடர்பான மத்திய அரசின் உத்தரவு நவம்பர் 13-ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விலங்குகள் மீது சோதனை செய்யப்படும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவும் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.