Last Updated : 19 Jan, 2017 12:33 PM

 

Published : 19 Jan 2017 12:33 PM
Last Updated : 19 Jan 2017 12:33 PM

உபி தேர்தல்: வேட்பாளர்கள் அறிவிப்பை எதிர்த்து பாஜக தலைமையகம் முன் போராட்டம்

வேற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகப் புகார்

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பை எதிர்த்து உத்தரப் பிரதேச பாரதிய ஜனதாவினர் டெல்லியில் பாஜக தலைமையகம் முன் போராட்டம் நடத்தினர்.

இக்கட்சி வெளியிட்ட முதல் பட்டியலில் வேற்று கட்சியில் இருந்து வந்தவர்கள் இடம் பெற்றுள்ளதாக புகார் கிளம்பியுள்ளது.

வரும் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை ஏழுகட்டமாக உபி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்கிழமை முதல் துவங்கியது. இதன் ஒருநாள் முன்னதாக முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களுக்காக 149 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது.

இதில், பல வருடங்களாக கட்சிக்கு பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாமல் வெளியில் இருந்து வந்த 16 பேர் பெயர் இடம் பெற்றுள்ளதாக புகார் கிளம்பியுள்ளது. இதை தெரிவிக்கும் உபி மேற்குபகுதியின் பாஜகவினர் தன் தலைமைக்கு எதிராக காஸ்கன்ச், ஏட்டா, சஹரான்பூர் உட்படப் பல இடங்களில் செய்ய்வாய் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில், கட்சியின் கொடியை எரித்ததுடன், உபி மாநில பாஜக தலைவர்களுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது. இவர்கள், தற்போது டெல்லியிலுள்ள பாஜக தலைமையகம் முன்பாகவும் நேற்று போராட்டம் நடத்தினர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் சஹரான்பூர் மாவட்ட பாஜக தலைவரான விஜய் காஷ்யப் கூறுகையில், ‘பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸில் இருந்து எங்கள் கட்சிக்கு சமீபத்தில் வந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு போராட்டங்களில் கட்சிக்கு போராடியவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நான் உட்பட வெற்றி வாய்ப்பில் உள்ள ஏழு பேருக்கு இந்த மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் தோல்வி அடையும் வாய்ப்புகள் அதிகம்.’ எனத் தெரிவித்தார்.

காஸ்கன்ச் மாவட்டத்தில், உபியின் முன்னாள் முதல் அமைச்சரும் ராஜஸ்தான் மாநில ஆளுநருமான கல்யாண்சிங், இடையில் பாஜகவை விட்டு தனிக்கட்சி துவங்கிய கல்யாண்சிங் பிறகு சமாஜ்வாதியில் இணைந்திருந்தார். பின்னர் மக்களவை தேர்தலின் போது பாஜகவிற்கு திரும்பி வந்தார்.

எனினும், இவரது பேரன் சந்தீப்சிங் மற்றும் கல்யாண்சிங் நடத்திய கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 5 பேருக்கு ஏட்டா மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை எதிர்த்து காஸ்கன்ச் பாஜகவினர் கல்யாண்சிங் மற்றும் ராஜ்வீர்சிங்கின் கொடும்பாவிகளை எரித்து போராட்டம் நடத்தினர்.

பாஜகவின் முதல் பட்டியலால் பாஜகவின் சில முக்கிய தலைவர்களும் அதிருப்தியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சரின் மகனான பங்கஜ்சிங் டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டா அல்லது சாய்பாபாத் ஆகிய இருதொகுதிகளில் போட்டியிட விரும்பி இருந்தார்.

இங்கு அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பது அதன் காரணம். ஆனால், அவருக்கு மிர்ஜாபூர் அல்லது மத்துராவில் போட்டியிடும்படி கட்சி தலைமை கூறுவதாகக் கருதப்படுகிறது. இதேபோல், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதியை எதிர்த்து பாஜகவில் இணைந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா.

இவர் தனது இருபதிற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்தார். இதில் எவருக்கும் வாய்ப்பளிக்கப்படாதமையால், மவுரியா அதிருப்தியுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x