

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வந்து கொண்டிருந்த சென்னை விரைவு ரயிலில் பயணிகளிடம் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்களை ரயில்வே போலீஸார் விரட்டியடித்தனர்.
இதுகுறித்து அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) அதிகாரி பிரஜ்பால் சிங் கூறியதாவது:
சண்டீகர்-மதுரை சென்னை விரைவு ரயில் சண்டீகரிலிருந்து மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. வெள்ளிக் கிழமை இரவு உத்தரப் பிரதேச மாநிலம் நாக்வால் மற்றும் தாப்ரி ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது, அதில் பயணிகள் போர்வையில் இருந்த கொள்ளையர்கள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளனர்.
இதையடுத்து, மேலும் சில கொள்ளையர்கள் ரயிலில் ஏறி உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆயுதங்களைக் காட்டி பயணிகளிடம் கொள்ளையடிக்க முயன்றனர். இதனால் பயணிகள் பீதியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த ரயிலின் மற்ற பெட்டிகளில் இருந்த ரயில்வே போலீஸார் விரைந்து சென்று கொள்ளையர்களுடன் சண்டை போட்டனர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த ரயிலில் மேற்கூரையை துளையிட்டு ரூ.5.75 கோடியை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே போலீஸார் விரைந்து சென்று கொள்ளையர்களுடன் சண்டை போட்டனர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.