

6 ஆண்டு கால நீதிமன்றப் போராட் டத்துக்கு பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி, 34 வயதான ரோஹித் சேகரை தனது மகனாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களின் முதல்வராக இருந்த என்.டி. திவாரி (89) கடைசியாக ஆந்திர மாநில ஆளுநராகப் பணியாற்றினார். அப்போது வெளியான ஆபாச வீடியோ காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனிடையே கடந்த 2008-ம் ஆண்டில் ரோஹித் சர்மா என்பவர் என்.டி.திவாரியை தனது தந்தை என்று அறிவிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை திவாரி மறுத்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. 2012-ம் ஆண்டில் என்.டி.திவாரிக்கும் ஹோஹித் சர்மாவுக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டது.
இதில் என்.டி.திவாரிதான் ரோஹித்தின் தந்தை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் திவாரி பிடிவாதமாக இருந்ததால் வழக்கு விசாரணை இழுபறியாக நீடித்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிற் றுக்கிழமை இரவு டெல்லியில் உள்ள தனது ஓய்வு மாளிகைக்கு ரோஹித் சர்மாவையும் அவரது தாயார் உஜ்வாலா சர்மாவையும் திவாரி வரவழைத்தார். அப்போது ரோஹித்தை தனது மகனாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
இதுதொடர்பாக தனது புதிய குடும்பத்துடன் டெல்லியில் நிருபர்களுக்கு திங்கள்கிழமை அவர் பேட்டியும் அளித்தார்.
திவாரி பேசியபோது, ரோஹித் எனது மகன், இனிமேல் இதுகுறித்து எந்தப் பிரச்சினையையும் எழுப்பத் தேவையில்லை என்றார்.
ரோஹித்தை சட்டப்பூர்வ வாரிசாக அறிவிப்பீர்களா என்று கேட்டபோது திவாரி நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார்.
ரோஹித் நிருபர்களிடம் கூறியதாவது: இது என்னுடைய வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான தருணம். எனது தாயின் போராட்டத் துக்கு இன்று விடிவுகாலம் பிறந்திருக்கிறது. எனது தந்தை திவாரி தனது வாக்குறுதியில் உண்மையாக இருக்க வேண்டும் என்றார்.
திவாரியின் அறிவிப்பில் முழு திருப்தியா என்று ரோஹித்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, உங்களுக்கே (நிருபர்கள்) சந்தேகம் இருப்பதால்தான் நீங்கள் இந்த கேள்வியை கேட்கிறீர்கள், எனது மனதிலும் சில சந்தேகங்கள் உள்ளன என்றார்.
இதுகுறித்து உஜ்வாலா சர்மா நிருபர்களிடம் பேசியபோது, ரோஹித் எனது மகன்தான் என்று அவர் (திவாரி) பகிரங்கமாக அறிவித்துள்ளார். அதிலேயே அனைத்தும் அடங்கிவிட்டது என்றார்.