

கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது பள்ளிக்கு அருகே போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக புகார் தெரிவித்ததை தொடர்ந்து, ஒரே நாளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையம் சார்பாக பெங்களூருவில் நேற்று முன் தினம் பள்ளி மாணவர்கள் முதல்வர் சித்தராமையாவுடன் உரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கர்நாடகாவில் உள்ள 30 மாவட்டங்களைச் சேர்ந்த 100 மாணவர்கள் பங்கேற்ற இந்த கேள்வி - பதில் நிகழ்ச்சியில், சில மாணவர்கள் தொலைபேசி மூலமாகவும் சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பினர்.
பள்ளி மாணவர்களின் துடிப்பான கேள்விகளை கூர்ந்து கவனித்த சித்தராமையா, மிகவும் பொறுமையாக அனைவருக்கும் பதில் அளித்தார். பெரும்பாலான மாணவர்கள் முன்வைத்த புகார்களைக் கேட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அப்போதே உத்தரவிட்டார். இதனைக் கண்ட பள்ளி மாணவர்கள் கைகளைத் தட்டி உற்சாகமாக ஆரவாரம் செய்தனர்.
அப்போது ஷிமோகாவை சேர்ந்த ஒரு மாணவி, ''நான் தங்கியுள்ள அரசு மாணவியர் விடுதியில் தனியாக குளியல் அறை இல்லை. இதனால் மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எங்களுக்கு குளியலறை கட்டித்தர வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார். இதற்கு சித்தராமையா, ''குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது. கர்நாடகாவில் குழந்தைகளை துன்புறுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாணவி தெரிவித்த புகாரின் பேரில் அதிகாரிகள் நேரில் சென்று, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்''என உத்தரவிட்டார்.
இதையடுத்து 8-ம் வகுப்பு மாணவன் ஒருவர் அங்கிருந்த தொலைபேசியில் அழைத்து சித்தராமையாவிடம், ‘‘எனது பள்ளி அமைந்துள்ள கே. நாராயணப்புரா அருகே போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். போதைப் பொருட்களை விற்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்?''என கோரிக்கை விடுத்தார்.
இந்த கேள்விக்கு சித்தராமையா பதில் சொல்வதற்கு முன்பாகவே எழுந்த இன்னொரு மாணவன், ‘‘நான் படிக்கும் பெங்களூரு சிட்டி பள்ளிக்கு அருகிலும் போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும்''என புகார் தெரிவித்தார். இதற்கு சித்தராமையா, ‘‘பள்ளி மாணவர்களை கெடுக்கும் வகையில் போதைப் பொருட்கள் விற்பதை முழுமையாக தடுக்க வேண்டும். இரு மாணவர்கள் தெரிவித்த புகாரின் பேரிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்க நடவடிக்கை தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் எனக்கு விளக்கம் தர வேண்டும்''என உத்தரவிட்டார்.
இந்நிலையில் பெங்களூரு மாநகர போலீஸார் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் இந்த விவகாரத்தை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். புகார் அளித்த பள்ளி மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு அருகே போதைப் பொருட்களை விற்ற கும்பலை சேர்ந்த 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். சித்தராமையாவின் இந்த நடவடிக்கை பெற்றோர்களிடம் மட்டுமல்லாமல் மாணவர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
பெங்களூருவில் பள்ளி மாணவர்களிடம் உற்சாகமாக உரையாடிய கர்நாடக முதல்வர் சித்தராமையா.