Published : 27 Sep 2013 11:15 PM
Last Updated : 27 Sep 2013 11:15 PM

2ஜி அறிக்கையை ஏற்றது ஜேபிசி: ராசா மீது குற்றச்சாட்டு - மன்மோகன், சிதம்பரத்துக்கு நற்சான்று

நாடாளுமன்றக் கூட்டுக்குழு 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான வரைவு அறிக்கைக்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் கொடுத்தது. அறிக்கைக்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிர்த்து 11 வாக்குகளும் பதிவாகின.

இந்த ஊழலில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இல்லை. அவர்கள் சுத்தமானவர்கள் என அறிக்கை சான்று கொடுத்துள்ளது.

அறிக்கைக்கு ஆதரவாக ஆளும் கூட்டணி தரப்பில் 14 வாக்குகள் பதிவான நிலையில் வெளியிலிருந்து ஆதரிக்கும் கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சியின் 2 உறுப்பினர்களும் சமாஜவாதி கட்சியின் 1 உறுப்பினரும் ஆதரித்து வாக்களித்தனர்.

ஜேபிசி குழுவில் உள்ள மொத்த உறுப்பினர்கள் 30 பேர். இவர்களில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேர் வாக்கெடுப்புக்கு வரவில்லை.

எஞ்சிய 27 பேரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 பேர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு உறுப்பினர், பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு உறுப்பினர், நியமன உறுப்பினர் அசோக் கங்குலி ஆகியோரின் வாக்குகள் ஆளும் கூட்டணிக்கு கிடைத்தது

பாஜகவின் 5 உறுப்பினர்கள், பிஜு ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், அதிமுக, திமுக கட்சிகளின் தலா ஒரு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தவர்கள்.

அலைக்கற்றை விவகாரத்தில் பிரதமருக்கு தவறான தகவல்களை கொடுத்து வந்ததுடன், அவருக்கு கொடுத்த உறுதிமொழிகளையும் மீறி செயல்பட்டுள்ளார் என முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா மீது குற்றம்சாட்டுகிறது இந்த அறிக்கை.

அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் காரணமாக அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தலைமை தணிக்கை அதிகாரி மதிப்பீடு செய்ததை நிராகரிப்பதாகவும், இது அர்த்தமற்ற மதிப்பீடு என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இது பற்றி நிருபர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டி அளித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் பி.சி சாக்கோ ஜேபிசி வரைவு அறிக்கையை எதிர்த்து வாக்களித்தவர்கள், ஆட்சேப அறிக்கை தாக்கல் செய்ய 15 நாள்கள் அவகாசம் தரப்படு்ம என்றார்.

முன்னதாக இந்த வரைவு அறிக்கை ஏப்ரலில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது அலைக்கற்றை சம்பந்தமாக 2008 ஜனவரி 7-ல் வெளியான பத்திரிகை குறிப்பு, அப்போதைய சொலிசிட்டர் ஜெனரல் ஜி.வி.வாகன்வதியின் பார்வைக்கு வந்த பிறகு, அதில் ஆ.ராசா திருத்தம் செய்துள்ளார் என்று ஜேபிசி குழு அறிக்கையில் புகார் சொல்லப்பட்டுள்ளது.

முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை என்கிற விதிமுறை விஷயத்திலும் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. இது செயல்பாட்டில் இருந்த நடைமுறைக்கு மாறானது. ஒருங்கிணைந்த சேவை அனுமதி உரிம விஷயத்தில் தொலைத்தொடர்பு துறை பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை முடிவு செய்யும் விவகாரத்தில் பிரதமர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார் என்கிற முடிவுக்கு ஜேபிசி வந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

தொலைத்தொடர்புத்துறை விதித்துள்ள நடைமுறைகளும் விதிமுறைகளும் ஒளிவு மறைவுமின்றி பின்பற்றப்படும் என பிரதமருக்கு தெரிவித்த உறுதிமொழியை ஆ. ராசா மீறியுள்ளார் என ஜேபிசி அறிக்கை குறைகூறியுள்ளது.

தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களிடம் வசூலிக்கப்படாமல் நிலுவையில் உரிமக் கட்டண விஷயத்தில் அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜக்மோகனின் எதிர்ப்பையும் மீறி அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு சலுகை காட்ட எடுத்த முடிவையும் குறை கூறியுள்ளது இந்த அறிக்கை.

நிலுவைத் தொகையை ஆபரேட்டர்களிடம் இருந்து வசூலிக்கவேண்டும் என்பது ஜக்மோகனின் நிலை. இது தொடர்பாக அப்போதைய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 1998 டிசம்பர் 21ம் தேதி தெரியப்படுத்தியுள்ளார் ஜக்மோகன்.

பாஜக தாக்கு

இந்த வாக்கெடுப்பில் குறுக்கு வழியில் பெரும்பான்மையை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் பாஜக தலைவரும் ஜேபிசி உறுப்பினருமான யஷ்வந்த் சின்ஹா.

ஜேபிசி குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தாமல் தவறான உண்மைகள அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில் குழு முன் ஆ.ராசாவை ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற கோரி்க்கையை கடைசி வரை அரசு நிராகரித்துவிட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x