

அந்தமானில் வாழும் ஜாரவா பழங்குடியினரை வீடியோ படம் எடுத்த சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் திரைப்பட இயக்குநர் அலெக்சாண்டர் டெரிம்ஸ், தயாரிப்பாளர் கிளாரி பெலிவர்ட் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தமான் நிகோபார் தீவுகளில் ஜாரவா பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். ஜாரவா மக்கள் வசிக்கும் பகுதியில் அனுமதியில்லாமல் நுழைவது, புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, வேட்டையாடுவது, மதுபானங்கள் அருந்துவது, நோய்க் கிருமிகளை பரப்புவது போன்ற செயல்களுக்கு தடை விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது.
இந்நிலையில் அந்தமான் தீவுப் பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் பிரான்ஸ் திரைப்பட இயக்குநர் அலெக் சாண்டர் டெரிம்ஸ், தயாரிப் பாளர் கிளாரி பெலிவர்ட் ஆகியோர் நுழைந்து ஜாரவா பழங்குடியினரை வீடியோ எடுத்து குறும்படம் தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்தமான் அரசிடம் தன்னார்வ தொண்டு நிறுவனம் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண் டனையும் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.