

ராஜஸ்தானில் 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுகட்டும் பாஜக, மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கிறது.
ராஜஸ்தானில் தனிப் பெரும்பான்மை பெறும் நிலையில், அம்மாநில பாஜகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சுமார் 140 இடங்களைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜக இருக்கிறது. காங்கிரஸ் சுமார் 30 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் கெலோட் முதல்வராக உள்ளார். அவரது அரசின் செயல்பாடுகளுக்கான மதிப்பீடாக இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
பாஜகவின் இந்த எழுச்சிக்கு மோடியின் பின்புலம் மிக முக்கிய காரணம் என்று வசுந்தரா ராஜே கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக தரப்பில் வசுந்தரா ராஜே முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார். அவர் தனது தொகுதியில் வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இரு கட்சிகளும் 200 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.
ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் - பிற்பகல் 12.35 மணி வெற்றி / முன்னணி நிலவரம்:
பாரதிய ஜனதா கட்சி - 135
காங்கிரஸ் - 38
பகுஜன் சமாஜ் - 2
இதர கட்சிகள் / சுயேச்சை - 24
மொத்தத் தொகுதிகள்: 200
மத்தியப் பிரதேசத்தில் வெற்றி
மத்தியப் பிரதேசத்தில் பாஜக தனது ஆட்சியைத் தக்கவைக்கிறது. 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் நிலையில் அக்கட்சி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் தொடர்ச்சியாக 3 முறை முதல்வராக பதவியேற்பார். காங்கிரஸ் தரப்பில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டிருந்தார்.
இங்கு மொத்தமுள்ள 230 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் 229 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மத்தியப் பிரதேசம் தேர்தல் பிற்பகல் 12.35 மணி வெற்றி / முன்னணி நிலவரம்:
பாரதிய ஜனதா - 152
காங்கிரஸ் - 69
பகுஜன் சமாஜ் - 5
மற்றவை/சுயேச்சை - 3
மொத்தத் தொகுதிகள்: 230