

பலாத்கார பாதிப்புக்குள்ளான தன்னை ஆண் போலீஸார் ஆடையை அவிழ்த்து மானபங்கப்படுத்தியதாக 14 வயது சிறுமி கூறிய புகாரின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு ஹரியாணா அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக சிறுமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த பஞ்சாப் ஹரியாணா உயர் நீதிமன்றம் அம்மாநில போலீஸ் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. டிஜிபி-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் மாநில அரசும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விசாரணைக்காக அழைத்துச் சென்ற இடத்தில் ஆண் போலீஸார் தன்னை ஆடைகளைக் களையுமாறு கூறி மானபங்கம் செய்ததாக அச்சிறுமி தனது தந்தை வாயிலாக சிறுமி மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "கடந்த ஆண்டு (2016) நவம்பர் 20-ம் தேதி நான் கைத்தால் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தேன். நவம்பர் 23-ம் தேதியன்று என்னை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அங்கிருந்த ஆண் காவலர்கள் எனது ஆடையை நீக்கச் சொல்லி வற்புறுத்தினர். பின் நான் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறேனா என்பதை சோதனை செய்யப்போவதாகக் கூறி எனது அந்தரங்க உறுப்புகளை தீண்டினர். இதனால் நான் மிகுந்த வேதனைக்குள்ளானேன். இது தொடர்பாக காவல்துறை டிஜிபியிடம் புகார் அளித்தேன். ஆனால், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலீஸ் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் டிஜிபி-க்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தற்போது மாநில அரசும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.