Last Updated : 10 Mar, 2015 06:14 PM

 

Published : 10 Mar 2015 06:14 PM
Last Updated : 10 Mar 2015 06:14 PM

ஆலம் விடுதலை: சட்டபூர்வமாக விளக்கும் மஜகவும் எதிர்ப்பை வலுக்கும் பாஜகவும்

ஜம்மு - காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதற்கு, அம்மாநிலத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி (மஜக) தலைமையிலான அரசு சட்டபூர்வமான விளக்கத்தை அளித்துள்ளது.

அதேவேளையில், இந்த விவகாரத்தில் மஜகவின் நிலைப்பாட்டை துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள பாஜக தனது எதிர்ப்பை வலுப்படுத்தியுள்ளது. இதனால், காஷ்மீரில் ஆளும் கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் வலுத்துள்ளன.

இந்த விவகாரம், நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படுவதால், மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு பெரும் தலைவலியாக நீடிக்கிறது.

காஷ்மீர் அரசு விளக்கம்:

ஆலம் விடுதலை குறித்து ஜம்மு - காஷ்மீர் இணையமைச்சர் இம்ரான் ராஸா அன்சாரி செவ்வாய்க்கிழமை கூறும்போது, கிரிமினல் குற்றச்சாட்டுகள் இல்லாத அரசியல் கைதிகளை விடுதலை செய்யலாம் என்ற நீதிமன்ற உத்தரவு மற்றும் வழிகாட்டுதலைப் பின்பற்றியே ஆலம் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அமித் ஷாவை சந்திக்க முடிவு

இந்த விவகாரம் வலுவாகியுள்ள நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து இது தொடர்பாக பேசவுள்ளதாகவும் அன்சாரி தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து பாஜகவுக்கு முதல்வர் முப்தி முகமது சையீது கடிதம் எழுதியுள்ளாரா? என்று கேட்டதற்கு, "அனைத்து நடவடிக்கைகளும் நீதிமன்ற உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றியே நடக்கின்றன. அரசியல் ரீதியிலான சமரசத்துக்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம்" என்றார் அவர்.

முன்னதாக, மஸ்ரத் ஆலம் விடுதலையை கண்டித்தும், அவரை மீண்டும் சிறையில் அடைக்க வலியுறுத்தியும் காஷ்மீர் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

சகித்துக்கொள்ள முடியாது: பாஜக

ஆலம் விடுதலை விவகாரத்தில், பிரிவினைவாதத்துக்கு ஆதரவான நடவடிக்கையில் சமரசம் செய்துகொள்ள வாய்ப்பே இல்லை என்று பாஜக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் முகதர் அபாஸ் நக்வி கூறும்போது, "தீவிரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் பாஜக துளியும் சகித்துக்கொள்ளாது. இதுபோன்ற விஷயங்களில் கூட்டணி தர்மத்துக்காக வளைந்து கொடுக்கவோ அல்லது நிலைப்பாட்டில் சமரசம் செய்துகொள்ளவோ முடியாது" என்றார்.

இதனிடையே, பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங், "மஸ்ரத் ஆலமின் விடுதலை முற்றிலும் தவறானது. இந்த விவகாரத்தை உற்று கவனித்து வரும் உள்துறை அமைச்சகம், அரசியல் சாசன சட்டம் மீறப்படாததை உறுதி செய்யும்.

ஆட்சியை விட எங்களுக்கு நாட்டு மக்களின் பாதுகாப்பே முக்கியம். ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதைப் போல மஸ்ரத் ஆலம் விடுதலை விஷயத்தில் ஜம்மு - காஷ்மீர் அரசு அளித்த விளக்கத்தை நாங்கள் ஏற்கவும் இல்லை. அதில் சமரசம் செய்துகொள்ளவும் இல்லை" என்றார் ராஜ்நாத் சிங்.

2010-ம் ஆண்டில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்தவர் ஆலம். அந்தக் கலவரத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆலம் கைது செய்யப்பட்டார். 4 ஆண்டுகள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், கடந்த சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x