Published : 12 Oct 2014 10:57 AM
Last Updated : 12 Oct 2014 10:57 AM

ஆந்திராவை தாக்கியது ‘ஹுத்ஹுத்’ புயல்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வங்கக் கடலில் உருவான ‘ஹுத்ஹுத்’ புயல் நேற்று மதியம் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. சூறாவளி காற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி ஆந்திராவில் 6 பேரும், ஒடிஸாவில் 3 பேரும் உயிரிழந்தனர். இரு மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

வங்கக் கடலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்தமான் தீவு அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘ஹுத்ஹுத்’ என பெயரிடப்பட்டது. இந்த புயல் மெதுவாக கடலோர ஆந்திராவை நோக்கி நகர்ந்தது.

புயல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கடலோர ஆந்திராவில் உள்ள விசாகப் பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் மணிக்கு 60 - 70 கி.மீ. வேகத்தில் கடந்த சனிக்கிழமை மாலை காற்று வீசியது. கடலின் சீற்றம் அதிகரித்துக் காணப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.

முன்னதாக கடலோரப் பகுதிகளில் வசிக் கும் 5 லட்சம் பேரை ஆந்திரப் பிரதேச மாநில அரசு, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியது. மீட்புப் பணிகளை மேற்கொள்ள துணை ராணுவப் படையினர், கடற்படையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் கடலோர ஆந்திரப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 8 ஹெலிகாப்டர்கள், 4 விமானங்கள், 162 மீட்புப் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு 7 மணி முதல் புயலின் சீற்றம் அதிகரித்தது. காற்று பலமாக வீசியதால் இச்சாபுரம் - காக்கிநாடா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

“தென் மத்திய ரயில்வே சார்பில் 62 ரயில்கள் முழுமையாகவும், 5 ரயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்பட்டன. 51 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்” என்று பொது மேலாளர் ஸ்ரீவத்ஸவா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நேற்று காலை கடலோர ஆந்திரா, ஒடிஸா பகுதிகளில் மணிக்கு 70 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால், பெரும்பாலான மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இதனிடையே ‘ஹுத்ஹுத்’ புயல் விசாகப் பட்டினம் அருகே உள்ள கைலாசகிரி எனும் இடத்தில் காலை 11.30 மணியளவில் கரையை தொட்டது. அப்போது சுமார் 170 முதல் 200 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. பின்னர், சுமார் 2 மணி நேரம் கழித்து விசாகப்பட்டினம் அடுத்துள்ள புடிமடகா எனும் இடத்தில் கரையை கடந்தது. அப்போது, விசாகப் பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி களை சூறாவளி காற்று புரட்டிப் போட்டது.

கரையை கடந்த பிறகு சுமார் 6 மணி நேரம் புயலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பின்னர் படிப்படியாக அதன் சீற்றம் குறைந்தது. எனினும், அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை இருக்கும் என்று விசாகப்பட்டினம் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

பயிர்கள் சேதம்

புயல் காற்று வேகமாக வீசியதில், மரங் கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் கடும் சேதமடைந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன. பல கட்டிடங்களில் கதவுகள், ஜன்னல்கள் உடைந்தன. கடலோரத்தில் இருந்த நூற்றுக் கணக்கான குடிசைகள் சேதமடைந்தன. செல்போன் டவர்களிலிருந்து சிக்னல்கள் வராததால், செல்போன்கள் செயலிழந்தன.

ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், பருத்தி, தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வாழை, தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததில் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

9 பேர் பலி

பலத்த மழை, புயலில் சிக்கி ஆந்திரா வில் உள்ள விசாகப்பட்டினத்தில் 3 பேர், ஸ்ரீகாகுளத்தில் 2 பேர், தெலங்கானாவின் ஹைதராபாத்தில் ஒருவர் என மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர். புயல் மழைக்கு ஒடிஸா மாநிலம் கேந்திர பாராவில் நேற்று முன்தினம் 2 பேரும், பூரியில் நேற்று ஒருவரும் உயிரிழந்தனர்.

ஒடிஸாவும் தப்பவில்லை

புயலின் ருத்ர தாண்டவத்தால், ஆந்திரா வின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜய நகரம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்கள் மட்டுமின்றி, ஒடிஸா மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள 7 மாவட் டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புயல், ஆந்திரா மாநிலக் கரையை கடந்த போது, ஒடிஸா கடலோர மாவட்டங்களில் 60 - 70 கி. மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x