

பிளாஸ்டிக் அரிசியை நேபாளம் வழியாக இந்தியாவுக்கு சீனா அனுப்புவதாக மூத்த வழக்கறிஞர் சுக்ரீவா துபே (76) புகார் கூறியுள்ளார். இவர் பிளாஸ்டிக் அரிசி குறித்து கடந்த 2015-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தவர் ஆவார்.
மூத்த வழக்கறிஞரும் இடதுசாரி சிந்தனையாளருமான சுக்ரீவா துபே, இது தொடர்பாக ‘தி இந்து’விடம் கூறும்போது, “அரிசி, பருப்பு, சர்க்கரை என அனைத்து உணவுப் பொருட்களி லும் கலப்படம் அதிகமாகி விட்டது. இதன் மூலம் நமது இளைய சமுதாயத்தினர் சர்வதேச நாடுகளால் குறி வைக்கப்படு கின்றனர். இந்தியாவின் வளர்ச்சியை கண்டு அவர்கள் அஞ்சுவதே இதற்கு காரணம்.
இயற்கையான அரிசியில் சீனாவின் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவது குறித்து கடந்த 2015, ஜூலையில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் மத்திய அரசும் டெல்லி அரசும் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன் டெல்லி, சதர் பஜாரில் கலப்படம் செய்ய வைத்திருந்த சீனாவின் பிளாஸ்டிக் அரிசியை டெல்லி அரசு கைப்பற்றியுள்ளது. நான் தொடர்ந்த வழக்கின் அடுத்த விசாரணையில், சீனாவின் பிளாஸ்டிக் அரிசி நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வருவதை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பேன். நேபாளத்தில் இருந்து சுமார் 400 இடங்களில் எல்லையை எளிதாகக் கடந்து இந்தியா வரமுடியும். இவற்றின் வழியாக தென் மாநிலங்கள் வரை பிளாஸ்டிக் அரிசி அனுப்பப்படுகிறது. இதை உண்ணச் செய்து புற்றுநோயை உருவாக்குவதே சீனாவின் நோக்கமாகும். ஏனெனில் சீனா நமக்கு புற்றுநோய் மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது” என்றார்.
கலப்படம் தொடர்பாக கடந்த 25 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளை துபே தொடர்ந்துள்ளார். “கலப்படம் செய்யப்பட்ட அரிசியில் பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது சிரமம். சமைத்து உண்ணும் போதும் வித்தியாசம் அறிவது கடினம். வயிற்றுக்குள் செல்லும் இந்த உணவில் இயற்கை அரிசி ஜீரணமாகி விடும். பிளாஸ்டிக் அரிசி மட்டும் உள்ளே ஒட்டிக்கொண்டு, புற்றுநோயை உருவாக்கும்” என்கிறார் துபே.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2015 முதல் ஒத்திவைக்கப்பட்டு வரும் பிளாஸ்டிக் அரிசி வழக்கு அடுத்த மாதம் தலைமை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே டெல்லியில் பிடிக்கப்படும் கலப்படப் பொருட்கள், உடனடியாக பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பப்படுவதில்லை என புகார் கூறப்படுகிறது.