

தனித்தெலுங்கானா அமைக்கும் மத்திய அமைச்சரவையின் முடிவை எதிர்த்து ஆந்திராவில் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தனி தெலங்கானா அமைக்கலாம் என்று கடந்த ஜூலை 30 அன்று காங்கிரஸ் தலைமையிலான அரசு எடுத்த ஒருமித்த முடிவுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து தெலங்கானாவை கடுமையாக எதிர்த்து வரும் கடலோர ஆந்திரா, ராயலசீமாவை உள்ளடக்கிய சீமாந்திராவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு :
ஆந்திராவைப் பிரித்து தனி தெலுங்கானா அமைப்பதை எதிர்த்து மத்திய இணை அமைச்சர் சிரஞ்சீவியும் மேலும் 3 காங்கிரஸ் எம்.பி.க்களும் நேற்றே பதவி விலகினர். இந்நிலையில், மத்திய அமைச்சரவையின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக காங்கிரஸ் எம்.பி., ராஜகோபால் இன்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்: ஆந்திர மாநிலத்தை 2ஆக பிரித்து தனித் தெலங்கானா அமைக்கும் மத்திய அமைச்சரவையின் முடிவு இந்திய அரசியல் சாசனத்திற்கும், ஜனநாயகத்திற்க்கும் எதிரானது. தனித் தெலங்கானா அமைப்பது தொடர்பாக ஆந்திர சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது நிச்சயம் தோற்க்கும் என்றார்.
தெலங்கானா விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியை, சீமாந்திரா தொகுதி மத்திய அமைச்சர்களும், எம்,எல்.ஏ.,க்களும் சந்தித்து பேச இருப்பதாக தெரிவித்தார். பெரும்பாலான நேரங்களில் மாநில பிரிவினை என்பது மத்திய அரசின் விருப்பங்களை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மீது திணிப்பதாகவே இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
சீமாந்தாராவில் பந்த்:
சீமாந்தாராவில் இன்று பந்த் நடத்தப்படுகிறது. பந்த் 72 மணி நேரத்திற்கு தொடரும் என போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். முழு அடைப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால், திருப்பதிக்கு செல்லும் பக்த்தர்கள் போக்குவரத்து வசதி இன்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.