

ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் இன்று (திங்கள்கிழமை) நடத்திய துப்பாக்கி தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.
இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையில் கதவ் வெளிப்புற நிலைகள் மீது திங்கள்கிழமை காலை 11.30 மணி அளவில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் எல்லைப்படை வீரர் எம். பாசுவின் அடிவயிற்றில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என்றார் அவர்.
பாகிஸ்தான் ராணுவம் இந்த ஆண்டில் முன்றாவது முறையாக நேருக்கு நேர் துப்பாக்கி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி இதே பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படை தலைமை காவலர் ராம் நிவாஸ் மீனா காயமடைந்தார். புல்லட் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஆகஸ்ட் 11-ம் தேதி இறந்தார்.