குடியரசுத் தலைவர் தேர்தல் இரு தலித்துகளுக்கு இடையேயான போட்டி அல்ல: மீரா குமார்

குடியரசுத் தலைவர் தேர்தல் இரு தலித்துகளுக்கு இடையேயான போட்டி அல்ல: மீரா குமார்
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் தேர்தல் இருவேறு சித்தாந்தங்களுக்கு இடையேயான போட்டியே தவிர இரண்டு தலித்துகளுக்கு இடையேயான போட்டியல்ல என்று காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீரா குமார் தெரிவித்தார்.

குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து மீரா குமார் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பரத் சின்ஹா சோலங்கி, சங்கர் சிங்க் வகேலா ஆகியோரும் இருந்தனர். சுமார் 40 நிமிடங்கள் அவர் சபர்மதி ஆசிரமத்தில் இருந்தார்.

"நான் சபர்மதி ஆசிரமத்துக்கு வரக் காரணம் இங்கிருந்து காந்திய சக்தியைப் பெற வேண்டும் என்பதே. காந்தி இல்லத்தில் சில மணித்துளிகள் இருந்தேன். எனக்கு மன அமைதி கிட்டியது. புத்துணர்வும் கிட்டியுள்ளது. மகாத்மா காந்தியின் சித்தாந்தத்தை முன்னெடுக்கவே நான் போராடிக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

முன்னதாக விமான நிலையத்தில் அவர் கூறும்போது, "குடியரசுத் தலைவர் தேர்தல் இருவேறு சித்தாந்தங்களுக்கு இடையேயான போட்டியே தவிர இரண்டு தலித்துகளுக்கு இடையேயான போட்டியல்ல. இரண்டு தலித்துகளுக்கு இடையேயான போட்டியைப் போல் இத்தேர்தலை சிலர் சித்தரிக்க முயற்சி செய்கின்றனர். இந்த பூமியில் (குஜராத்தில்) இருந்துதான் காந்தியின் சித்தாந்தம் தேசம் முழுவதும் உலகம் முழுவதும் பரவியது. அந்தக் கொள்கையை முன்னெடுப்பதே எனது லட்சியம். குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்" என்றார்.

ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் சார்பில் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in