

மத்திய அமைச்சரிடம் தவறாக நடந்து கொண்டாகக் கூறப்படும் விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ரேணுகா சவுத்ரிக்கு எதிராக மாநிலங்களவையில் நேற்று உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆம் ஆத்மி எம்.பி. பகவந்த் மான் நாடாளுமன்றத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட விவகாரம் குறித்து, கடந்த 22-ம் தேதி ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரச்சினை எழுப்பினர். மக்களவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அதனால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
அப்போது அமைச்சர் ஹர்சிம் ரத் கவுர் மாநிலங் களவையில் இந்த விவகாரம் குறித்து பேச முயன்றார். இதற்கு ஜெய்ராம் ரமேஷ், ரேணுகா சவுத்ரி எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் கடும் அமளி காரணமாக மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
அமைச்சர் புகார்
இதையடுத்து, மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மற்றும் ஜெய்ராம் ரமேஷ், ரேணுகா சவுத்ரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருவரும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அமைச்சர் புகார் கூறினார்.
சிரோமணி அகாளி தளம் கட்சி உறுப்பினர் சுக்தேவ் சிங் தின்ட்சா இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் நேற்று பிரச்சினை எழுப்பினர். அப்போது அவர் பேசும்போது, “அமைச்சரிடம் தவறாக நடந்து கொண்ட இருவரும் மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர வேண்டும்” என்றார்.