

டெல்லி சிக்கல் தீர்ந்துவிட்டது, ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது என செய்திகள் வெளியாகி 24 மணி நேரம் கூட முடியாத நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்தது சரியான முடிவுதானா என காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு கருத்து நிலவுவதாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜனார்தன் திவேதி தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 70 இடங்களில் 32 இடங்களை கைப்பற்றிய பாஜக நாங்கள் எதிர்கட்சியாகவே இருந்து கொள்கிறோம் என ஒதுங்கிக் கொண்டது.
வெறும் 8 இடங்களை மட்டுமே பிடித்து 15 வருட கால ஆட்சிப் பீடத்தை தொலைத்த காங்கிரஸோ, 28 இடங்களைக் கைப்பற்றிய புதிய கட்சி ஆம் ஆத்மி-க்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக தெரிவித்தது.
அதற்கு அப்புறம் காங்கிரஸ், பாஜகவுடன் ஒரு போதும் கூட்டு கிடையாது, கூட்டணி அமைய வேண்டுமானாலும் நாங்கள் போடும் 18 நிபந்தனைகளையும் ஏற்க வேண்டும் என கெடுபிடி செய்த ஆம் ஆத்மி ஒரு வழியாக 'மக்கள் கருத்தைக்' கேட்டு காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமைக்கிறோம், அரவிந்த் கெஜ்ரிவால் தான் எங்கள் முதல்வர் என்றது.
ஆனால், புதிய திருப்பமாக ஆம் ஆத்மி அறிவிப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் வந்துள்ளது திவேதியின் கருத்து. ஆம் ஆத்மியுடனான கூட்டணி குறித்து அவர் மேலும் கூறுகையில், " ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தது சரியானது தானா என காங்கிரஸ் இப்போது கருதுகிறது. நெருக்கடி காங்கிரசுக்கு அல்ல... எனவே காங்கிரஸ் எதிர்கட்சியாக இருந்து மக்கள் பிரச்சினைகளை எழுப்பியிருக்க வேண்டும் " என தெரிவித்துள்ளார். மேலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் காங்கிரஸ் நடுநிலையாக செயல்படும் என்றார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பதற்காக, காங்கிரஸ் அளிப்பது நிபந்தனையற்ற ஆதரவு அல்ல என்று நேற்று ஷீலா தீட்சித் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.