

உத்தரபிரதேசத்தின் புதிய முதல்வராக யோகி ஆதித்யநாத் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் துணை முதல்வர்களாக கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோரும் 44 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர்.
உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 325 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. புதிய முதல்வரை தேர்வு செய்ய பாஜக எம்எல்ஏக் களின் கூட்டம் லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கோரக்பூர் தொகுதி எம்.பி. யோகி ஆதித்யநாத் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு லட்சம் பேர் பங்கேற்பு
இதைத் தொடர்ந்து உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள 96 ஏக்கர் பரப்பளவு கொண்ட கன்சிராம் ஸ்மிருதி உப்வான் மைதானத்தில் நேற்று புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது. அதற்காக 100 பேர் அமரும் வகையில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, 11 மாநிலங்களின் முதல்வர்கள் உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் விழாவில் கலந்து கொண்டனர். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மட்டும் விழாவை புறக்கணித்தார்.
2 துணை முதல்வர்கள்
பிற்பகலில் நடைபெற்ற விழா வில் உத்தரபிரதேசத்தின் புதிய முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ராம் நாயக் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பாஜக மாநிலத் தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, லக்னோ மேயர் தினேஷ் சர்மா ஆகியோர் துணை முதல்வர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுடன் 44 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதில் 22 பேர் கேபினட் அமைச்சர்கள். முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சராக கிரிக்கெட் வீரர் மோஷின் ரஸா இடம்பெற்றுள்ளார்.
புதிய பாஜக அரசு பதவியேற்றது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
மாநில முதல்வராகப் பதவி யேற்ற பிறகு ஆதித்யநாத் முதல் முறையாக லக்னோவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியத்தின்படி உத்தரபிர தேசம் வளர்ச்சிப் பாதையில் வழி நடத்தப்படும். தேர்தலின்போது அளித்த அனைத்து வாக்குறுதி களும் படிப்படியாக நிறைவேற்றப் படும். அனைத்து சமூக மக்களின் முன்னேற்றத்துக்காகவும் அரசு பாடுபடும். இதில் பாரபட்சம் காட்டப்படாது.
இதேபோல மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சமச்சீராக வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக கிராமங் களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். விவசாயிகளின் துயரங்கள் துடைக்கப்படும். வேலைவாய்ப்புகளை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆட்சிகளில் ஊழல்கள் புற்றீசல் போல பெருகியதால் மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டது. அந்த தடைகள் அனைத்தும் அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கணித பட்டதாரி துறவியாகி, முதல்வரானது எப்படி?
உத்தராகண்ட் மாநிலம், பவுரி கார்வால் அருகே உள்ள பாஞ்சூரில் கடந்த 1972 ஜூன் 5-ம் தேதி ராஜபுத்திர குடும்பத்தில் யோகி ஆதித்யநாத் பிறந்தார். அவரது இயற்பெயர் அஜய் சிங்.
தந்தை ஆனந்த் பிஸ்த் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி. தாயார் சாவித்திரி தேவி. இத்தம்பதிக்கு 4 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். இதில் 2-வது மகன்தான் ஆதித்ய நாத். உத்தராகண்டின் நகரில் உள்ள கார்வால் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., கணிதம் பட்டம் பெற்ற ஆதித்யநாத், ராமர் கோயில் இயக்கத்தில் இணைந்தார்.
அப்போது கோரக்பூர் தலைமை துறவி வைத்ய நாத்துடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவரது சீடராக இணைந்து ஆன்மிக பணியில் ஈடுபட்டார். கடந்த 1998-ல் கோரக்பூர் தலைமை துறவி வைத்யநாத் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார்.
அப்போது தனது அரசியல் வாரிசாக ஆதித்ய நாத்தை அவர் அறிவித்தார். அதே ஆண்டில் கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து ஆதித்யநாத் முதல்முறையாக நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். அடுத்தடுத்து அதே தொகுதியில் 5 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப் பட்டார்.
பூர்வாஞ்சல் என அழைக்கப்படும் கிழக்கு உத்தரபிரதேசம் முழுவதும் யோகி ஆதித்ய நாத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 2002-ல் இந்து யுவ வாஹினி அமைப்பைத் தொடங்கி பசு பாதுகாப்பு, சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். 2014 செப்டம்பர் 12-ல் கோரக்பூர் தலைமை துறவி வைத்யநாத் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து கோரக்பூர் மடத்தின் தலைமை துறவியாக ஆதித்யநாத் பொறுப்பேற்றார்.
அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது யோகி ஆதித்யநாத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று இந்து யுவ வாஹினியின் மாநிலத் தலைவர் சுனில் சிங் திடீரென போர்க்கொடி உயர்த்தினார். சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து பாஜகவை தோற்கடிப்போம் என்றும் அவர் அறிவித்தார்.
மோதல் முற்றியதால் யோகி ஆதித்யநாத் தரப்புக்கும் பாஜக தலைமைக்கும் இடையே ஆர்எஸ்எஸ் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தது. அதைத் தொடர்ந்து இந்து யுவ வாஹினி மாநிலத் தலைவர் சுனில் சிங் நீக்கப்பட்டார். அந்த அமைப்பு தேர்தலிலும் போட்டியிடவில்லை. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஆதித்யநாத்தின் உத்தரவின்பேரிலேயே நடந்ததாகக் கூறப்படுகிறது.