

போக்குவரத்து விதிகளை மீறும் போலீஸ்காரர்களை பற்றி தகவல் தரும் பொதுமக்களுக்கு ரூ.1000 சன்மானம் வழங்கும் திட்டத்தை ரோத்தக் மாவட்ட எஸ்.பி. அமல்படுத்தி உள்ளார்.
ஹரியாணா மாநிலம் ரோத்தக் கில் தவறு செய்யும் போலீஸாரை நல்வழிப்படுத்தும் நோக்கில், மாவட்ட எஸ்.பி. பங்கஜ் நயின் கடந்த வாரம் ஒரு நூதன திட்டத்தை அமல்படுத்தினார். அதன்படி, போக்குவரத்து விதிகளை மீறும் போலீஸ்காரர்கள் பற்றி பொது மக்கள் ஆதாரப்பூர்வமாக தகவல் அளித்தால் ரூ.1000 சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் போலீஸ்காரர்களின் புகைப்படம், வீடியோக்களை அனுப்ப வாட்ஸ் அப் எண்ணும் (9996464100) வெளியிடப்பட்டது. இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
வாட்ஸ் அப்பில் தகவல் வந்த வுடன், சம்பந்தப்பட்ட போலீஸ் காரர் சென்ற வாகனத்தின் பதிவு எண் மூலம் அவர்கள் வீட்டுக்கே சென்று நோட்டீஸ் வழங்கப்படு கிறது. இந்த அறிவிப்புக்குப் பிறகு 3 போலீஸ்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விதிகளை மீறும் போலீஸ்காரர்களைப் பற்றி தினமும் குறைந்தது 50 தகவல்களாவது வருகின்றன.
அவற்றில் பல புகைப்படங்கள், வீடியோக்கள் தெளிவில்லாமல் உள்ளன. விதி மீறும் போலீஸ் காரரின் வாகனத்தின் பின்புறம் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக் கள், புகைப்படங்கள் அதிகமாக வருகின்றன. அதனால் வாகன பதிவெண் தெரியாமல் நட வடிக்கை எடுக்க முடியவில்லை.
ஜிந்த், பானிப்பட், ஜஜ்ஜார், கைத்தால், கர்னால் போன்ற மற்ற மாவட்டங்களில் இருந்து இதுபோன்ற தகவல்கள் வரு கின்றன. அவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸாருக்கு அனுப்பி விடுகிறோம். ஆனால், ரோத்தக் மாவட்டத்தில் உள்ளதுபோல் மற்ற மாவட்டங்களில் இது போன்ற பிரச்சாரம் மேற்கொள்ளப் படவில்லை.
இவ்வாறு போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இதுகுறித்து ரோத்தக் மாவட்ட எஸ்.பி. பங்கஜ் நயின் கூறும்போது, ‘‘வாகனங்களில் செல்வோரிடம் தகுந்த ஆவணங்கள் இருக் கின்றனவா, கார்களில் செல்லும் போது இருக்கை பெல்ட் அணிந் திருக்கிறார்களா என்று போலீஸார் சோதனை செய்கின்றனர். ஆனால், விதிமுறைகளைப் பின் பற்றும்படி பொதுமக்களிடம் சொல்வதற்கு முன்னர் போலீஸார் அவற்றைப் பின்பற்ற வேண்டும். அதை வலியுறுத்திதான் இந்த நடவடிக்கை’’ என்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை எஸ்.பி. பங்கஜ் நேரடியாக களத்தில் இறங்கி சோதனை செய்தார். அப்போது தகுந்த ஆவணங்கள் இல்லாமல், தலைகவசம் அணியாமல், கார் இருக்கை பெல்ட் அணியாமல் சென்ற 75 போலீஸார் சிக்கினர்.