Published : 13 Jul 2016 04:29 PM
Last Updated : 13 Jul 2016 04:29 PM

காஷ்மீர் மக்களுக்கும் அரசுக்குமான இடைவெளி பெரிது: எம்.ஐ.எம். கட்சித் தலைவர் ஓவைசி பேட்டி

மஜ்லிஸ் இத்தேஹதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ‘காஷ்மீர் மக்களுக்கும் அரசுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது’ என்றார். மேலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் காஷ்மீர் ஓர் அங்கம் என்றும் கூறியுள்ளார்.

ஒவைசி உடனான பேட்டியின் விவரம்:

காஷ்மீரின் தற்போதைய நிலவரம் பற்றி உங்கள் கருத்து என்ன?

ஒவைசி: கடந்த 2 அல்லது 3 நாட்களில் 30 பேர் பலியாகியுள்ளனர். மக்கள் பெருமளவில் அன்னியமாகி வருகின்றனர். ஆட்சி நிர்வாகம் இல்லை. முப்தி முகமது சயீத் மறைவிற்குப் பிறகு மீண்டும் அரசாட்சி அமைவதற்கு மாதக்கணக்காகியுள்ளது. பாஜக ஆட்சியில் இருக்கும் போது அரசமைக்க ஏன் இவ்வளவு காலதாமதம்? அன்னியமாதல் மிகப்பெரிய விஷயம். முப்தி இறந்த பிறகு அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோரே கலந்து கொண்டனர். அதே நாளில் போராளி ஒருவரின் இறுதிச் சடங்கில் 40,000 பேருக்கும் மேல் கலந்து கொண்டனர். போராளிகள் கொல்லப்படும்போது இறுதிச் சடங்குகளில் பெரிய அளவுக்கு எண்ணிக்கை கூடுகிறது. இது எதனை அறிவுறுத்துகிறது?

நீங்கள் கூறவருவது என்ன?

மக்களுக்கும் அரசுக்கும் தொடர்பு பெரிய அளவில் துண்டிக்கப்பட்டுள்ளதை இது காட்டுகிறது. அன்னியமாதல். இது நல்ல நிலைமையல்ல.

எம்.ஐ.எம். கட்சி அன்னியமாதல் விஷயத்தை கையிலெடுக்குமா?

ஆட்சியில் இருக்கும் கட்சி முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயம்.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக குறித்து உங்கள் கருத்தென்ன?

பாஜக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. முந்தைய அரசு கட்டுப்படுத்தத் தவறிய விலைவாசி உயர்வு, தவறான ஆட்சி அதிகாரம், ஊழல் ஆகியவற்றினால் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை. உண்மையான பொருளாதார முன்னேற்றம் ஏற்படவில்லை. 1.5 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற உறுதி மொழி காப்பாற்றப்படவில்லை.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு விஷயத்திலும் பெரிய முரண்பாடு நிலவுகிறது. ஹரியாணாவில் ஜாட்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க பாஜக விரும்புகிறது. இதற்காக சட்டமும் இயற்றியுள்ளது. ஆனால் மாநில உயர்நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. மகாராஷ்டிராவில் முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீட்டிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தும் அமல் செய்யப்படவில்லை. ஆனால் மாட்டிறைச்சித் தடைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அயலுறவுக் கொள்கை என்று வரும்போது காஷ்மீர் பற்றிய இவர்களது கொள்கை என்ன?

காஷ்மீர் அயலுறவுக்கொள்கையிலா வருகிறது?

இது நமது அயலுறவுக் கொள்கையின் அங்கம். பாகிஸ்தான் குறித்து நமது கொள்கை என்னவென்று தெரியவில்லை. பாகிஸ்தான் பிரதமர் வீட்டுத் திருமணத்தில் மோடி கலந்து கொள்கிறார், ஆனாலும் உறவுகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பிறகு பதான்கோட் தாக்குதல் நடக்கிறது. இப்போது காஷ்மீரில் கலவரம் மூண்டுள்ளது. காஷ்மீரில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, வெள்ளத்தில் அனைத்தையும் இழந்த மக்களுக்கு மத்திய அரசு எந்த வித உதவியையும் அளிக்க முன்வரவில்லை.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை நீங்கள் தீவிரமாக எதிர்க்கிறீர்கள், ஆனால் ஐஎஸ்-ல் இருப்பதாக சந்தேகப்படும் நபர்களுக்கு சட்ட ஆதரவு அளிக்கிறீர்கள். ஏன்?

சட்ட உதவி என்பது நமது அரசமைப்புச் சட்டத்தின் படி அடிப்படை உரிமைகள் தொடர்பானதாகும். சட்ட உதவி அளிப்பதனால் ஒருவர் குற்றவாளியா அல்லது இல்லையா என்று கூறிவிட முடியாது. கோர்ட், ஆதாரங்களின் அடிப்படையில் யார் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கும். ஐஎஸ் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்த தீர்ப்பை கோர்ட் வழங்கட்டும். ஆனால் இதற்காக ஐஎஸ் அமைப்பை நான் ஏன் தாக்காமல் இருக்க வேண்டும். ஐஎஸ் அமைப்பை சீரான முறையில் விமர்சனம் செய்து வரும் ஒரு சில முஸ்லிம் தலைவர்களில் நானும் ஒருவன்.

ஒரே சீரான குடிமைச் சட்டம் என்பதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 16 வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அந்த 16 நெறிமுறைகளையும் நடைமுறைப்படுத்த நாம் ஏன் விவாதம் வைக்கவில்லை?

ஏன் ஒரே குடிமைச் சட்டம் என்பதை பிடித்துக் கொள்கிறோம்? மேலும் ஒரு வழிகாட்டு நெறிமுறை தடை உத்தரவு பிறப்பிக்க கூறுகிறது. நீங்கள் அதனைச் செய்ய முடியுமா? இலங்கை போன்ற நாடுகளில் கூட முஸ்லிம்களுக்கென்று தனிச்சட்டங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா? ஸ்காட்லாந்து, இங்கிலாந்திலும் 2 குற்றவியல் சட்டங்கள் உள்ளன. பன்முகத்தன்மையே இந்த நாட்டின் வலிமை. பின் எப்படி நீங்கள் ஒரே சட்டம், ஒரே பண்பாட்டை புகுத்த முடியும்? இந்தியாவில் 100 வேறுபட்ட மொழிகளைப் பேசும் மக்கள் தொகுதி உள்ளனர், ஆயிரக்கணக்கான பண்பாடுகள் உள்ளன.

பாரத் மாதா கி ஜெய் சொல்ல மாட்டேன் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள் அல்லவா?

சட்டம் நான் அவ்வாறு கூறித்தான் ஆகவேண்டும் என்று வலியுறுத்தவில்லை. ஜெய்ஹிந்த் என்று கூற விரும்புகிறேன், ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் கூறுவதில் எனக்கு தடையில்லை. நான் சட்டத்தை மீறுபவன் அல்ல. என்னுடைய தேசியவாதத்தை கேள்வி கேட்க அவர்களுக்கு உரிமை அளித்தது யார்? ஆனால் இன்றைய தினத்தில் சங்பரிவாரின் கொள்கைகளைக் கடைபிடித்தால் அவர் தேசியவாதி என்ற துரதிர்ஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை எதிர்த்தால் அவர் தேசவிரோதி. இனி ஏ ஃபார் ஆப்பிள் இல்லை ஏ ஃபார் ஆன்ட்டி நேஷனல் என்றாகி விட்டது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் உங்கள் கட்சியின் உத்தி என்ன?

உ.பி.யில் கூட்டணிக்குத் தயாராக இருக்கிறேன். உ.பி.யில் ஒரு பொதுக்கூட்டம் கூட நடத்த அனுமதியில்லாத ஒரே அரசியல் தலைவர் நான் தான். ஆளும் சமாஜ்வாதிக் கட்சிக்கு கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் போன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை போலும். இந்திய மக்கள் இதனை கூர்ந்து நோக்க வேண்டும்.

பஜ்ரங்தள் ஆயுதப் பயிற்சி பட்டறை நடத்தலாம், ஆர்.எஸ்.எஸ். தனது ஷாக்காக்களை நடத்தலாம். ஆனால் எம்.ஐ.எம். பொதுக்கூட்டம் போடக்கூடாது. இதனால்தான் நான் காரிலேயே நாளொன்றுக்கு 300-400 கிமீ சென்று மக்களை நேரில் சந்தித்து வருகின்றேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x