

உத்தராகண்ட் காவல் துறையில் பணியாற்றியபோது, பாஜக எம்எல்ஏவால் தாக்கப்பட்டு உயிரிழந்த சக்திமான் வெள்ளை குதிரைக்கு வைக்கப்பட்ட சிலை 4 நாட்களில் அகற்றப்பட்டது.
கடந்த சுமார் 7 ஆண்டுகளாக சக்திமான் உத்தராகண்ட் காவல் துறையில் பணியாற்றி வந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் டேராடூனில் மாநில அரசுக்கு எதிராக பாஜக சார்பில் போராட்டத்தின் போது, பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி சக்திமான் குதிரையை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதன் கால் முறிந்தது. செயற்கைக் கால் பொருத்திய போதும் சில வாரங்களுக்குப் பிறகு இறந்தது.
இந்நிலையில், டேராடூனில் உள்ள முக்கிய சாலை சந்திப்பில் கடந்த சனிக்கிழமை சக்திமான் குதிரைக்கு சிலை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்தோருக்கு சிலை வைக்க வேண்டும் என்றும், குதிரைக்கு சிலை தேவையில்லை என்றும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அந்த குதிரை சிலை நேற்று அகற்றப்பட்டது.
மேலும் காவல்துறை தலைமை அலுவலகம் உள்ள பகுதியில் சக்திமானுக்கு மேலும் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை முதல்வர் ஹரிஷ் ராவத் விரைவில் திறந்து வைக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், இந்தப் போராட்டம் காரணமாக இந்த சிலையின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த சிலை இப்போதைக்கு திறந்து வைக்கப்பட மாட்டாது என கூறப்படுகிறது.
முதல்வர் ஹரிஷ் ராவத் கூறும்போது, “இந்த சிலை இங்கு இருக்க வேண்டுமா அல்லது அகற்றப்பட வேண்டுமா என்பது குறித்து புதிதாக அமைய உள்ள அரசு முடிவு எடுக்கும்” என்றார்.
உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து ஹரிஷ் ராவத் அரசு சக்திமான் சிலை விவகாரத்தில் அரசியல் செய்வதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.