

பெண் பத்திரிகையாளரிடம் முறைகேடாக நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து 'தெஹெல்கா' ஆசிரியர் தருண் தேஜ்பால் 6 மாத காலத்துக்கு தான் வகித்து வரும் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பெண் பத்திரிகையாளரிடம் முறைகேடாக நடந்ததை ஒப்புக்கொண்டுள்ள தருண் தேஜ்பால், இது தொடர்பாக பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "கடந்த சில நாட்கள் மிகவும் சோதனை நிறைந்த காலகட்டமாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கு நானே பொறுப்பு. சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டு விட்டேன். இருந்தாலும், பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் என்று என் மனம் நிர்பந்திப்பதால், பதவி விலகுகிறேன்". இவ்வாறு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தருண் தேஜ்பால் கடிதத்தைத் தொடர்ந்து, 'தெஹெல்கா' பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரி நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் இ-மெயில் மூலம் தருண் தேஜ்பால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதை தெரிவித்துள்ளார்.