Published : 02 Feb 2017 01:15 PM
Last Updated : 02 Feb 2017 01:15 PM

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்குக: மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் வலியுறுத்தினார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், கேரளாவின் மலப்புரம் தொகுதி எம்.பி.யுமான இ.அகமது மறைவையொட்டி, மக்களவை நடவடிக்கைகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டன. அதேவேளையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் மாநிலங்களவை நடவடிக்கைகள் இன்று தொடர்ந்தது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் தொடங்கி தமிழக பிரச்சினைகள் வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

அதிமுக எம்.பி. செல்வராஜ் பேசும்போது, "பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு 6 தடுப்பணைகளை சட்டவிரோதமாக கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

அக்கட்சியின் எம்.பி. விஜிலா சத்யானந்த், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசும்போது, "நாங்கள் அம்மாவை இழந்துவிட்டோம். கோடிக்கணக்கான மக்கள் அவரை அம்மா என்றே அழைத்தார்கள். தமிழகத்தின் இரும்புப் பெண்மணியான அவர், அனைத்து விதமான வளர்ச்சிக்கும் வழிவகுத்தவர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுத் திறனுக்கும் நிர்வாகத் திறனுக்கும் இணையாக உலகில் எந்தத் தலைவர்களுமே இல்லை. அவருக்கு பாரத ரத்னா வழங்கி கவுரவிக்க வேண்டும். அத்துடன், நாடாளுமன்றத்தில் அவருக்கு வெண்கல சிலை நிறுவவும், நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கவும் வேண்டும் என்று மத்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

தமிழக மழை பாதிப்பு பற்றி பேசிய அதிமுக எம்.பி. மைத்ரேயன், "தமிழகத்தை வெள்ளம் புரட்டிப் போட்டது. கடந்த டிசம்பரில் பெரும் சேதம் ஏற்பட்டது. மத்திய அரசு இன்று வரை புயல் நிவாரண நிதியை வழங்கவேயில்லை. டிசம்பரில் ஏற்பட மழை - வெள்ள பாதிப்புக்காக ரூ.22,000 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டிருந்தது" என்றார்.

அப்போது பேசிய விஜிலா சத்யானந்த், "தமிழகத்துக்கு புயல் நிவாரணத் தொகையில் ரூ.5,000 கோடியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

எண்ணூர் துறைமுகம் அருகே கடல் நீரில் மிதக்கும் எண்ணெய் படலத்தை அகற்றும் நடவடிக்கை குறித்து திமுக எம்.பி. கனிமொழி பேசினார். "பாதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதியில் தூய்மைப் பணியில் அரசு முழு ஈடுபாடு காட்டவில்லை. அப்பகுதியில் சுற்றுச்சூழல் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு உரிய நிபுணத்துவம் மிக்கவர்களை உருவாக்குவதே இல்லை. தூய்மைப் பணிகள் மெதுவாகவே நடந்து வருகிறது" என்று குற்றம்சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x