Last Updated : 06 Feb, 2014 12:00 AM

 

Published : 06 Feb 2014 12:00 AM
Last Updated : 06 Feb 2014 12:00 AM

பணி நீட்டிப்பில் உள்ளவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது- அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக வலியுறுத்தல்

பணி நீட்டிப்பில் இருக்கும் அதிகாரிகளை மக்களவைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் திமுக வலியுறுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் தேர்தல் ஆணையம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற தி.மு.க. மக்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ‘தி இந்து‘விடம் கூறியதாவது:

பணி நீட்டிப்பு செய்யப்பட்ட அதிகாரிகள் நேரடியாக தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தியுள்ளோம். அவர்கள் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. உதாரணமாக, தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி) 3-வது ஆண்டாக பணி நீட்டிப்பில் இருக்கிறார்.

குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிகாரிகளையும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது எனத் தெரிவித்து உள்ளோம்.

தேர்தல் செலவுகளின் வரம்பு தமிழகத்தில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ. 15 லட்சமாக உள்ளது. இதன் ஆறு தொகுதிகளுக்கு ரூ. 90 லட்சமாகிறது. ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கியது ஒரு நாடாளுமன்ற தொகுதி என இருக்கும் போது அதற்கு தற்போது ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ. 40 லட்சம் என்பது மிகவும் குறைவான தொகை.

ஆகவே, செலவு உச்சவரம்பை அதிகரிக்க அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. அநேகமாக உச்ச வரம்பு உயர்த்தி அறிவிக்கப்படும் என நம்புகிறேன். ஊடகங்களுக்காக தனியாக ஒரு நடத்தை விதிமுறைகள் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

அதேபோல், தேர்தல் சின்னங்களை அரசு வழங்கும் இலவச பொருள்கள் மற்றும் அரசு பொருள்களில் பயன்படுத்துகிறார்கள். முதல்வர் படத்தைப் பயன்படுத்துவதைக் கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். சின்னங்களின் படங்களை அரசு செலவில் பயன்படுத்தி தேர்தல் ஆதாயம் பெறுகிறார்கள்.

இது போல் அரசு நலத்திட்டங்களில் இடம்பெறும் கட்சி சின்னங்களை தேர்தல் ஆணையம் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

அரசியல் கட்சிகள் மீது கொடுக்கப்படும் புகார்களின் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை. இதையும் கூட்டத்தில் சுட்டிக் காட்டினோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x