

ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்களை 10 கோடி ரூபாய்க்கு வாங்க சில அரசியல் கட்சிகள் முயற்சி செய்ததாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் டெல்லிவாசிகளுக்கு புதன்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதற்காக உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஆனால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை. ஆட்சி அமைப்பதற்குத் தேவைப்படும் 36 இடங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு மேலும் 8 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்நிலையில், ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தர காங்கிரஸ் முன்வந்துள்ளது. பாஜக வும் டெல்லிவாசிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பிரச்சினை அடிப்படையிலான ஆதரவு தரத் தயார் என அறிவித்துள்ளது.
இவ்விரு கட்சிகளின் ஆதரவை கோராத நிலையில் அவர்களாகவே ஆதரவு தர முன்வந்துள்ளனர். அதேநேரம், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களை பத்து கோடி ரூபாய் கொடுத்து வாங்க சில கட்சிகள் முயற்சி செய்துள்ளன.
காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் ஆட்சியால் நாட்டில் ஊழல், மதவாதம், குற்றங்கள் பெருகி வருகின்றன. இதிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காகவும் அரசியலை சுத்தப்படுத்துவதற்காகவும் பாமர மக்கள் சார்பில் ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டது. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. இந்தச் சூழலில் இவ்விரு கட்சிகளில் ஒன்றின் ஆதரவுடன் எப்படி ஆட்சி அமைப்பது?
ஆம் ஆத்மி தனது பொறுப்புகளை தட்டிக் கழிப்பதாக சிலர் குறை கூறுகின்றனர். அது தவறு. இவ்விரு கட்சிகளால் டெல்லிவாசிகள் மிகவும் நொந்து போய் உள்ளனர். அடுத்த ஆறு மாதங்கள் வரையிலாவது காங்கி ரஸின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து டெல்லிவாசிகளுக்கு பயனுள்ள திட்டங்களை அமுல்படுத்தலாமா என்பது குறித்து நீங்கள்தான் கருத்து தெரிவிக்க வேண்டும்.
பிற கட்சியின் ஆதரவில் ஆட்சி அமைத்து நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்றும் மறு தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் கட்சியில் உள்ளவர்கள் இருவேறு கருத்துகளைக் கூறுகின்றனர்.
இதுவிஷயத்தில் மற்ற கட்சி களைப் போல மூடிய கதவுகளுக்குள் முடிவு எடுக்க விரும்பவில்லை. எனவேதான் பொதுமக்களாகிய உங்களிடம் வெளிப்படையாக கருத்து கேட்கிறோம் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.