மசூத் அசார், என்எஸ்ஜி விவகாரம்: இந்தியா - சீனா இடையே 22-ல் பேச்சு

மசூத் அசார், என்எஸ்ஜி விவகாரம்: இந்தியா - சீனா இடையே 22-ல் பேச்சு
Updated on
1 min read

மசூத் அசார், என்எஸ்ஜி விவகாரம் தொடர்பாக இந்தியாவும் சீனாவும் வரும் புதன்கிழமை (பிப். 22) விவாதிக்க உள்ளன.

இந்தியா சீனா இடையிலான பேச்சுவார்த்தை சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சீனாவின் வெளியுறவு துணை அமைச்சர் ஜாங் யெசூயியை இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசு கிறார்.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் பரஸ்பர நலன் கொண்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் இரு நாடுகளும் விவாதிக்கும்” என்றார்.

ஜெய்ஷ் இ-முகம்மது தீவிர வாதி மசூத் அசார் பாகிஸ்தானில் இருந்துகொண்டு இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை தூண்டி வருகிறார். அவரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. அறிவிக்க இந்தியா முயன்று வருகிறது. இதற்கு சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதற்கு இந்தியாவின் வருத்தத்தை ஜெய்சங்கர் தெரிவிப்பார் எனத் தெரிகிறது.

48 உறுப்பு நாடுகளை கொண்ட அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விஷயத்தையும் இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் தனது சந்திப்பில் எழுப்புவார் எனத் தெரிகிறது.

சீனா பாகிஸ்தான் இடையே ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பொருளாதார வழித்தடம் அமைக்கப்படுகிறது. இப் பிரச்சினையையும் இந்தியா எழுப்பும் எனத் தெரிகிறது. இவை தவிர, இந்தியா சீனா இடையிலான நீண்ட நாள் எல்லைப் பிரச்சினை, வர்த்தகப் பற்றாக்குறை ஆகியவையும் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என தெரிகிறது.

சீனா தரப்பில், தலாய்லாமா விவகாரமும், தைவான் எம்.பி.க்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்தது குறித்தும் எழுப்பப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in