

தெலங்கானா மாநில துணை முதல்வர் கடையம் ஸ்ரீஹரி, திடீரென நேற்று ஒரு பள்ளிக்குச் சென்று ஆசிரியராக மாறி, மாணவர் களுக்கு பாடம் நடத்தினார்.
வாரங்கல் நகரில் நடைபெற உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மாநாட்டு ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக ஸ்ரீஹரி நேற்று அங்கு சென்றார். அப்போது, அங்குள்ள ஒயாசிஸ் பப்ளிக் பள்ளிக்குச் சென்று ஆய்வு நடத்திய அவர், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தெலுங்கு பாடம் நடத்தினார். இதை அவருடன் வந்த அதிகாரிகளும், பள்ளி ஆசிரியர்களும் ஆச்சரியத்துடன் கவனித்தனர். இதனால் மாணவ மாணவியரும் உற்சாகமடைந்தனர்.
அதன்பிறகு ஹரி, மாணவர்களிடம் சில கேள்விகளை கேட்டார். அப்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால் உடனடியாக விடுமுறை வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தொலைபேசி மூலம் முதல்வர் கே.சந்திரசேகர ராவிடம் இந்தத் தகவலை அவர் தெரிவித்தார்.
பின்னர் அவர் கூறும்போது, “வரும் 23-ம் தேதி வரை பள்ளிகள் செயல்பட வேண்டி உள்ளது. ஆனால் மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற முதல்வர், வியாழக்கிழமை (இன்று) முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்க உத்தரவிட்டார்” எனத் தெரிவித்தார். இதை அறிந்த மாணவர்கள் துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
வாரங்கல் நகரில் உள்ள ஒரு பள்ளியில் பாடம் நடத்தும் தெலங்கானா மாநில துணை முதல்வர் கடையம் ஸ்ரீஹரி.