Published : 09 Dec 2013 12:05 PM
Last Updated : 09 Dec 2013 12:05 PM

அமைதியானவர்..செயல்வீரர் ரமண் சிங்!

நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவை மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்தியுள்ள ரமண் சிங் (61) அமைதியாக செயல்பாடுகளுக்கு பெயர் பெற்றவர்.

ரமண் சிங் தனது தேர்தல் பிரச்சாரத்தில், இந்துத்வா, மதமாற்ற எதிர்ப்பு போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை ஒதுக்கிவிட்டு வளர்ச்சி, முன்னேற்றம், மக்களுக்கு சிறந்த வாழ்க்கை போன்ற வாக்குறுதிகளையே முன்னி றுத்தினார்.

ஆயுர்வேத மருத்துவராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ரமண் சிங், பழங்குடியினர் பெரும்பாண்மையாக வசிக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தை தொடர்ந்து 10 ஆண்டுகள் எவ்வித இடையூறுமின்றி ஆட்சி செய்தவர். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரிசி கிலோ ரூ.2க்கும், அந்தியோதயா அட்டைதாரர்களுக்கு அரிசி கிலோ ரூ.1க்கும் வழங்கியது உள்பட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி மக்களின் அன்பை பெற்றார். இதில் மானிய விலை அரிசித் திட்டம் அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

மாநிலத்தில் மாவோயிஸ்ட் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சியினரின்

குற்றச்சாட்டு க்கு ஆளானபோதும், தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவரான ரமண் சிங், பின்தங்கிய மாநிலத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி திருப்பினார்.

உணவுப் பாதுகாப்பு சட்டத்தை காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முன்னரே அச்சட்டத்தை நடைமுறைப்படுத்திவிட்டார் ரமண் சிங். நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சர் பதவி வகித்தபோது, நக்ஸலிசத்துக்கு எதிராக ரமண் சிங்கின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளார். மாநிலத்தில் இடதுசாரி தீவிரவாதத்தை ஒடுக்க சல்வா ஜுடும் என்ற நக்ஸல் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். ஆனால் இந்த இயக்கம் மனித உரிமை ஆர்வலர்களின் விமர்சனத்துக்கு உள்ளானது. எதிர்க்கட்சிகளின் கடும் பிரச்சாரத்தையும் மீறி தற்போது மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்க உள்ளார் ராமன் சிங்.

சத்தீஸ்கரில் மீண்டும் பாஜக ஆட்சி

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் பாஜக 49 தொகுதிகளில் வெற்றி வெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

சத்தீஸ்கர் சட்டமன்றத்தின் மொத்த பலம் 90. இதில் பாஜக 49 இடங்களிலும் காங்கிரஸ் 39 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்க 46 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அந்த எண்ணிக்கையை பாஜக எட்டியிருப்பதால் 3-வது முறையாக ரமண் சிங் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

சத்தீஸ்கரில் கடந்த நவம்பர் 11, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 11-ம் தேதி 18 தொகுதிகளுக்கும் 19-ம் தேதி 72 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 77 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இந்த வாக்குகளை எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 27 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே இழுபறி நீடித்தது. இரு கட்சிகளும் சமபலத்துடன் இருந்தன.

மாலையில் பாஜக முன்னிலைப் பெற்றது. ஆட்சியமைக்க தேவையான 49 இடங்களை பாஜக கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸுக்கு 39 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நக்ஸல் தாக்குதலில் முன்னாள் மத்திய அமைச்சர்

வி.சி. சுக்லா, மாநில காங்கிரஸ் தலைவர் நந்த குமார் பட்டேல் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் 27 பேர் உயிரிழந்தனர்.

இதன் காரணமாக காங்கிரஸுக்கு அனுதாப ஓட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்றாலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இழுபறியாகவே இருந்தது.

தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியவுடன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று நம்புவதாகத் தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி முதல்வராகக் கூடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸின் அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளராகவே அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஆனால், கடைசிநேர திருப்பமாக பாஜக முன்னிலைப் பெற்று காங்கிரஸை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x