

கைத்தறி நெசவுத் துறையை ஊக்குவிக்க அன்றாட வாழ்வில் கைத்தறி ஆடைகளை அணியுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் நேற்று கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளி துறை அதிக வேலைவாய்ப்புகளை வழங்கு கிறது. குறிப்பாக கைத்தறியை நம்பி ஏராளமான நெசவாளர்கள் வாழ்கின்றனர். அந்தத் துறைக்கு ஊக்கம் அளிக்க வேண்டியது அவசியம்.
நாடு முழுவதும் கதர் ஆடைகளை அணிவது பேஷனாக மாற வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் அன்றாட வாழ்வில் கைத்தறி ஆடைகளை அதிகம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்றுமுன்தினம் நடந்த டவுன்ஹால் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி, கதர் ஆடைகளை அணிய வேண்டுகோள் விடுத்தார். அந்த வீடியோ பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்ற பிறகு கைத்தறி துறையை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2015 ஆகஸ்ட் 7-ம் தேதி முதல்முறையாக கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது.