

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வரு கிறது. இந்த பரிசீலனை இன் னும் முடிவடையாத நிலையில், அவருக்கு பொருளாளரை நீக்க உரிமை இல்லை எனத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதையடுத்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழு, கட்சியின் புதிய பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்தது. இத்தகவல் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை அங்கீகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இதில் சில விளக்கம் கேட்டதுடன், அதிமுக அதிருப்தி எம்.பி. சசிகலா புஷ்பா அளித்த புகார் மீதும் தேர்தல் ஆணையம் அதிமுகவிடம் விளக்கம் கேட்டுள்ளது.
சசிகலாவின் பொதுச்செய லாளர் பதவி தேர்தல் ஆணையத் தின் பரிசீலனையில் உள்ள நிலையில், கட்சியின் பொருளாளர் பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.
இது குறித்து ‘தி இந்து’ விடம் தேர்தல் ஆணைய வட்டாரங் கள் கூறும்போது, “தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்டங் களின்படி, சசிகலாவை அதிமுக தேர்ந்தெடுத்துள்ளதா என்ற பரிசீலனை இன்னும் முடிய வில்லை. இதன்மீது விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்துக்கு அதிமுக இன்னும் பதில் அளிக்கவில்லை. ஒருவேளை அவரது பதவி ஆணையத்தால் ஏற்கப்படாவிட்டால், சசிகலா எடுத்த முடிவுகள் செல்லாததாகி விடும்.
பன்னீர்செல்வம் தன்னை பொருளாளர் பதவியில் இருந்து நீக்கியது குறித்து புகார் அளித் தால் அதன் மீது ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தனர். இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, அதிமுக முன்னாள் நிர்வாகிகள் மேலும் சிலர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
இதன்மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆணையம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஏற்கெனவே அனுப்பிய கடிதத்திற்கு அதிமுக பதில் அளித்த பின், இப்புகார்கள் மீது ஆணையம் முடிவு எடுக்கும் எனக் கருதப்படுகிறது.