

கடலில் இருந்து இயற்கை வளங்கள், தாதுக்களைத் தோண்டி எடுப்பதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக வரும் டிசம்பர் மாதம் ரூ.10 ஆயிரம் கோடியில் ஆழ்கடல் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மேற்குவங்க மாநிலம் தித்தாகரில் நேற்று மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலர் மாதவன் நாயர் ராஜீவன் கூறும்போது, ‘‘விரைவில் ஆழ் கடல் ஆராய்ச்சி மையம் அமையவுள்ளது. ஆழ்கடல் திட்டத்தையும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய புவி அறிவியல் அமைச்சகம் கருத்துருவைத் தயாரித்து வருகிறது.
விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும். புவி அறிவியல் அமைச்சகத்துடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பிற அமைச்சகங்களும் இதில் இணைந்து பணியாற்றும்.
சென்னை கடலோரத்தில் கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலை அமைப்பது, ஆழ்கடல் எரிசக்தி, ஆழ்கடல் அறிவியல் மற்றும் மீன்பிடி, தாதுக்கள் மற்றும் பாலிமெட்டாலிக் முடிச்சுகளை ஆழ்கடலில் இருந்து தோண்டி எடுப்பது ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய சாரம்சமாக இருக்கும்’’ என்றார். - ஐஏஎன்எஸ்