

போக்ரானில் துணிச்சலாக அணுகுண்டு சோதனை நடத்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
கடந்த 1974-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, இந்தியா முதன்முதலாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அதன்பின், 1998-ம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் அடுத்தடுத்து 5 அணுகுண்டு சோதனைகளை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நடத்தி காட்டினார். அதன்பின், 1999-ம் ஆண்டு மே 11-ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி மே 11-ம் தேதியன்று தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்பட்டது. இதுகுறித்து மோடி ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், ‘‘போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்திய முன்னாள் பிரதமரின் துணிச்சல் மிகவும் பாராட்டத்தக்கது. இந்த வேளையில் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக நமது விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பாடுபடுபவர்களுக்கு இந்த தேசிய தொழில்நுட்ப தினத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 1998-ம் ஆண்டு அணுகுண்டு சோதனை நடத்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அரசியல் துணிவுக்கும் விஞ்ஞானிகளுக்கும் நாம் என்றென்றும் நன்றி கடன்பட்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நரேந்திர மோடி என்ற இணைய பக்கத்தில் பிரதமர் மோடி உரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘‘வாஜ்பாய் தலைமையில் நடத்திய போக்ரான் அணுகுண்டு சோதனையை இந்த உலகம் நன்கறியும். இந்தியாவின் சக்தியை உலகம் அறியும். விஞ்ஞானிகள் இந்த நாட்டை பெருமைப்படுத்தினர். அணுகுண்டு சோதனை நடத்தியவுடன், இந்தியா மீது மற்ற நாடுகள் பொருளாதார தடை விதித்தன. அதை கண்டு வாஜ்பாய் பயப்படவில்லை. தொடர்ந்து அணுகுண்டு சோதனை நடத்த நடவடிக்கை எடுத்தார். அப்போது வேறு யாராவது பிரதமராக இருந்திருந்தால், நிச்சயம் பொருளாதார தடையால பயந்திருப்பார்கள். ஆனால், வாஜ்பாய் வித்தியாசமானவர். தனது துணிச்சலை காட்டினார்’’ என்று புகழாரம் சூட்டி உள்ளார்.
மேலும், ‘‘போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி முடிக்கும் வரை அங்கு வசித்த மக்கள் மிகவும் அமைதி காட்டினர். அதற்காக அவர்களை மிகவும் பாராட்ட வேண்டும்’’ என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.