

பாஜக சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்திருப்பது சரியான முடிவு. அவர் ஒரு சோஷலிஸ்ட் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் கூறியுள்ளார்.
“தேசியவாதிக்குரிய அனைத்து பண்புகளும் மோடிக்கு உள்ளன.
இந்தியாவில் அணு சக்தியை பயன்படுத்தக் கூடாது என்பதே எனது நிலை. சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை ஊக்குவிக்க வேண்டும்.
மோடியும் சூரிய சக்தி மூலம் மின்சார உற்பத்தியை ஆதரித்து வருகிறார். வேறெந்த மாநிலத்தையும்விட குஜராத்தில் தான் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மது மறுப்புக் கொள்கையை மகாத்மா காந்தி கடைப்பிடித்தார். நமது அரசியல் சாசனத்திலும் மதுவுக்கு எதிரான கருத்தே கூறப்பட்டுள்ளது. நாட்டிலேயே இதை முழுமையாக பின்பற்றி வருவது மோடி தலைமையிலான குஜராத் அரசுதான்.
எனக்குத் தெரிந்தவரை குஜராத் மாநிலத்தில் அரசு அளவில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. மோடியின் நேர்மையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, தேசிய அளவில் ஆதரவு கொடுக்க தகுதியான நபர் நரேந்திர மோடி. பிரதமராகும் அரிய வாய்ப்பு அவருக்கு கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். அவர், சுயாட்சி கொள்கையை நிலைநாட்டவும், வறுமையை ஒழிக்கவும் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையுள்ளது.
நான் ஒரு சோஷலிஸ்ட். என்னைப் போன்று மோடியும் சமதர்மக் கொள்கையில் நம்பிக்கையுள்ள சோஷியலிஸ்ட் என்று நம்புகிறேன். மனித உரிமை, சகோதரத்துவம், நீதி, காந்திய சிந்தனையின் அடிப்படையிலான சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளை வலியுறுத்துபவராக மோடி உள்ளார்” என்றார் வி.ஆர்.கிருஷ்ண ஐயர்.