

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் தர பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை மேலும் 3 நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கைது செய்துள்ளனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
தினகரனிடம், தொடர்ந்து 3 நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகரை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சுகேஷ் சந்திரசேகரிடம் மேலும் 3 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது.