Published : 18 Mar 2017 04:17 PM
Last Updated : 18 Mar 2017 04:17 PM

விரைவில் வருகிறது ரூ.10 பிளாஸ்டிக் நோட்டு

எளிதில் கிழியாத பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் முயற்சியாக 5 நகரங்களில் ரூ.10 பிளாஸ்டிக் நோட்டை புழக்கத்தில் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பரிசோதனை முயற்சியாக இம்முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் வழக்கமான நோட்டுகளை விட சுத்தமானதாகவும், எளிதில் கிழியாமல் நீண்ட நாட்கள் பயன்படுத்தும் வகையிலும் இருக்கும். இதைக் கொண்டு கள்ள நோட்டுகளைத் தயாரிப்பதும் கடினம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால், ''நிதித்துறை அமைச்சகம், புதிய பத்து ரூபாய் நோட்டுகளை தயாரிக்க, பிளாஸ்டிக் மூலப் பொருட்களைக் கொள்முதல் செய்யவும், புதிய நோட்டுகளை அச்சடிக்கவும் இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரியுள்ளது.

பருத்தி மூலக்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட பழைய நோட்டுகளைக் காட்டிலும், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அதிக காலத்துக்கு உழைக்கும்.

வங்கி நோட்டுகளின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்காக, உலகளாவிய வங்கிகள் அனைத்தும் புதிய தொழில்நுட்பங்களைக் கையாள ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக நோட்டுகள் உருவாக்கத்தில் பிளாஸ்டிக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒரு பில்லியன் 10 ரூபாய் நோட்டுகளை பிளாஸ்டிக்கில் அச்சடித்து பரிசோதனை முயற்சி மேற்கொள்வதாக பிப்ரவரி, 2014-ல் அறிவிக்கப்பட்டது. அப்போது கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வர் ஆகிய 5 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இந்நிலையில் தற்போதைய பரிசோதனை முயற்சியிலும் இதே நகரங்கள் தேர்ந்தெடுக்கப்படுமா என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x