

தேர்தல் செலவு குறித்து தவறான கணக்கு காட்டிய மத்திய பிரதேச மூத்த அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடைவிதித்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.
1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 7(பி)-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில சட்டப்பேரவையின் எந்தவொரு அவையிலும் அவர் உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு பதவி வகிக்க முடியாது. மேலும் இந்த உத்தரவு வெளியான நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசில் நீர்வளம் மற்றும் சட்டப்பேரவை விவகார அமைச்சராக நரோத்தம் மிஸ்ரா பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணைய உத்தரவால் அவர் இனி அமைச்சராக நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் 2018-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட முடியாது.
கடந்த 2008-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு மிஸ்ரா தாக்கல் செய்த தேர்தல் செலவு கணக்கில், பத்திரிகைகளில் தனக்கு ஆதரவு செய்தி வெளியாக பணம் கொடுத்ததை அவர் கணக்கில் காட்டவில்லை என்று 2009-ல் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பாரதி புகார் அளித்தார்.
இதற்கு மிஸ்ராவின் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் கடந்த 2013 ஜனவரியில் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு எதிராக ம.பி. உயர் நீதிமன்றத்தில் மிஸ்ரா தடை உத்தரவு பெற்றார். பின்னர் புகார்தாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இத்தடையை உயர் நீதிமன்றம் விலக்கிக் கொண்டது. இதையடுத்து நரோத்தம் மிஸ்ரா உச்ச நீதிமன்றம் சென்றார். ஆனால் அங்கு அவர் எந்தவொரு நிவாரணமும் பெறமுடியவில்லை.
தகுதி நீக்கம் கோரும் மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மிஸ்ராவிடம் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு டெல்லியில் விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூறியுள்ள வகையிலும் உரிய நேரத்திலும் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு, இச்சட்டத்தின் 10(ஏ) பிரிவு அதிகாரம் வழங்குகிறது.
கட்டணச் செய்திக்காக செலவிட் டதை தேர்தல் செலவுக் கணக்கில் காட்டாமல் மிஸ்ரா மறைத்ததால் அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய உத்தரவை தொடர்ந்து மிஸ்ரா உடனடியாக பதவி விலகவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் அஜய் சிங் கூறும்போது, “தேர்தல்களில் பாஜக அமைச்சர் எவ்வாறு வெற்றி பெறுகின்றனர் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் தீபக் விஜய்வர்கியா கூறும்போது, “தேர்தல் ஆணைய உத்தரவை கட்சி ஆராய்ந்து வருகிறது. உடனடியாக கருத்து கூற முடியாது” என்றார்.
இதனிடையே அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறும்போது, “தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றம் செல்லப் போகிறேன். நான் பதவி விலக மாட்டேன். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ஒருவர் பதவி விலகத் தொடங்கினால் ம.பி.யில் ஒவ்வொரு நாளும் தேர்தல் நடைபெறும்” என்றார்.