

ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற திருவிழாக்களில் தடை செய்யப்பட்ட சேவல் பந்தயம் நடந்துள்ளது.
முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற இந்த சேவல் சண்டை பந்தயத்தில் ரூ.500 கோடி அளவில் பணம் கட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி என்ற பெயரில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் சேவல் பந்தயம் நடத்தப்படுவது முக்கியமான சிறப்பு அம்சம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை லட்சக்கணக்கில் பணம் கட்டி நடத்தப்பட்டு வந்த இந்த சேவல் பந்தயம், தற்போது கோடிக்கணக்கில் பணம் கட்டி பகிரங்கமாக நடத்தப்படுகிறது.
இதில் விசேஷம் என்னவென்றால் கட்சி பாகுபாடு இன்றி எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் முதல் ஊராட்சி மன்றத் தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் வரை அனைத்துத் தரப்பு அரசியல் பிரமுகர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என சினிமா பிரமுகர்களும் நேரடியாகவே இந்த சேவல் பந்தயங்களில் கலந்து கொள்கின்றனர். ஒரு போட்டியில் ரூ.20 முதல் 30 லட்சம் வரை பந்தயம் கட்டப்படுகிறது.
குறிப்பாக கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் மட்டும் கடந்த 4 நாட்களாக நடந்த சேவல் பந்தயங்களில் ரூ.500 கோடி வரை பந்தயம் கட்டப்பட்டுள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மட்டும் ரூ.300 கோடிவரை பந்தயம் கட்டப்பட்டு, போட்டிகள் நடைபெற்றுள்ளது.
இந்த பந்தயங்களில் பெந்தளூரு தொகுதி எம்.எல்.ஏ. சீதாமணி பிரபாகர், தனுகு தொகுதி எம்.எல்.ஏ. நாகேஸ்வரராவ், டி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ., அனுமந்த் ஷிண்டே, உண்டி தொகுதி எம்.எல்.ஏ., சிவராமராஜன், திரைப்படத் தயாரிப்பாளர் கோதண்ட ராமிரெட்டி, தக்குபாடி சுரேஷ் உட்பட பல முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டு பந்தயம் கட்டியுள்ளனர்.
கோதாவரி மாவட்டம் மட்டுமின்றி, ஹைதராபாத், தெலங்கானா மாவட்டங்கள், ராயலசீமா மாவட்டங்களிலும் இதுபோன்ற சேவல் பந்தயங்கள் நடைபெற்றுள்ளன.
இவற்றில் சென்னை, பெங்களூரு பகுதிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு பந்தயம் கட்டியுள்ளனர்.
10 முதல் 15 ஏக்கர் பரப்பளவு பகுதியில் நடைபெற்ற இந்த சேவல் பந்தயங்களில் போலீஸார் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளித்து எந்தவிதப் பிரச்சினைகளும் நேராமல் பார்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.