காஷ்மீர் அட்டூழியங்களுக்கு பதிலடியே யூரி தாக்குதல்: நவாஸ்

காஷ்மீர் அட்டூழியங்களுக்கு பதிலடியே யூரி தாக்குதல்: நவாஸ்
Updated on
1 min read

யூரியில் ராணுவ உயர் பாதுகாப்பு முகாமில் நடந்த தாக்குதல், காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் அட்டூழியங்களுக்கான எதிர்வினையாக இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்திருக்கிறார்.

மேலும், யூரி தாக்குதலில் ஆதாரம் இல்லாமல் பாகிஸ்தான் மீது பழி சொல்வதை விடுத்துவிட்டு காஷ்மீரில் கடந்த இரு மாதங்களாக நிகழ்ந்த உயிர் பலி தொடர்பாக இந்தியா விசாரணை மேற்கொள்ளட்டும் என ஷெரீப் கூறியுள்ளார்.

லன்டணில் செய்தியாளர்களை சந்தித்த ஷெரீப், "காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கள் உறவினர்களை இழந்தவர்களும், தங்களது பார்வையையும், தங்கள் உறவுகளின் பார்வையையும் இழந்தவர்களும் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள். யூரி தாக்குதல் காஷ்மீரில் நடைபெறும் அட்டூழியங்களுக்கான எதிர்வினையாக இருக்கும்.

ஆனால், இந்தியா அவசர அவசரமாக பழியை பாகிஸ்தான் மீது சுமத்துகிறது. சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் இந்தியா பாகிஸ்தான் மீது குற்றஞ்சாட்டுகிறது.

காஷ்மீரில் இந்தியா கட்டவிழ்த்துவிட்டுள்ள அட்டூழியம் உலகறிந்தது. காஷ்மீரில் இதுவரை 108 பேர் பலியாகியிருக்கின்றனர். 150-க்கும் மேற்பட்டோர் பார்வை இழந்துள்ளனர். காஷ்மீரில் தனது பங்கு என்ன என்பதை இந்தியா சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

யூரி தாக்குதலில் ஆதாரம் இல்லாமல் பாகிஸ்தான் மீது பழி சொல்வதை விடுத்துவிட்டு காஷ்மீரில் கடந்த இரு மாதங்களாக நிகழ்ந்த உயிர் பலி தொடர்பாக இந்தியா விசாரணை மேற்கொள்ளட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in