

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக வரும் 16-ம் தேதி கேப்டன் அமரிந்தர் சிங் பதவியேற்க உள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 77 தொகுதி களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களின் கூட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக அமரிந்தர் சிங் தேர்வு செய்யப் பட்டார். இதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் வி.பி.சிங் பட்னோரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பின்னர் அமரிந்தர் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் 14-ம் தேதி டெல்லி சென்று கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து புதிய அரசு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவேன். வரும் 16-ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்
முன்னதாக பாட்டியாலாவில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலின் போது காங்கிரஸ் அளித்த வாக் குறுதிகளை நிறைவேற்ற நட வடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பஞ்சாபில் போதைப் பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்படும்.
போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்களுக்கு மனநல மருத் துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப் படும். சுகாதாரம், கல்விக்கு எனது அரசு முன்னுரிமை அளிக்கும்.
தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலமாக பஞ்சாப் திகழும். அதற்கேற்ப தொழில் கொள்கை நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். மாநிலத் தில் தொழில் தொடங்க பல நிறு வனங்கள் ஆர்வமாக உள்ளன. பஞ்சாப் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும்.
நாடு முழுவதும் காங்கிரஸுக்கு ஆதரவான அலை வீசுகிறது. வரும் தேர்தல்களிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். பஞ்சாபில் ஆம் ஆத்மி அலை வீசவில்லை. சமூக வலைதளங்களில் மட்டுமே அந்தக் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. மக்களிடம் செல்வாக்கு இல்லை. ஆம் ஆத்மி நீர்க் குமிழ் போன்றது. அது விரைவில் உடைந்து காணாமல் போய்விடும்.
பிரகாஷ் சிங் பாதல் உட்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாதல் ராஜினாமா
இதனிடையே சட்டப்பேரவைத் தேர்தலில் அகாலி தளம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வி.பி.சிங் பட்னோரிடம் அளித்தார். 5 முறை முதல்வராகப் பதவி வகித்துள்ள பாதல், லம்பி தொகுதியில் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் அகாலி தளத்துக்கு 15 இடங்களும் அதன் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு 3 இடங்களும் கிடைத்தன.