

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ‘யோகி ஆதித்யநாத் பெயரை கோஷமிடுங்கள் இல்லையெனில் உ.பி.யை விட்டு வெளியேறுங்கள் என்று ஆங்காங்கே பேனர்களும், பதாகைகளும் வைக்கப்பட்டதையடுத்து பெரிய சர்ச்சை மூண்டுள்ளது.
உ.பி. முதல்வர் முன்பு தொடங்கிய இந்து யுவவாஹினி அமைப்பினர் இந்த பேனர்களை வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சர்ச்சைகள் கிளம்பியதையடுத்து பேனர்கள் அகற்றப்பட்டன. உயர்மட்ட போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பேனர்களில் “மாநிலத்தில் இருக்க வேண்டுமெனில் யோகி யோகி என்று கோஷமிடுங்கள்” என்ற வாசகங்கள் இருந்தன.
இந்தப் போஸ்டர்களில் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி, மற்றும் இந்து யுவவாஹினி தலைவர் நீரஜ் சர்மா பஞ்சாலி ஆகியோரது புகைப்படங்களும் இருந்தன.
மீரட் நகர மூத்த போலீஸ் உயரதிகாரி ரவீந்தர் கவுட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார், மாவட்ட நிர்வாகம் அனைத்து பேனர்களையும் அகற்றிவிட்டது.
போலீஸ் அதிகாரி கவுட் கூறும்போது, “இந்த பேனர்களை வைத்தவர்கள் யார், பின்னணி தகவல்களுக்கான விசாரணை நடைபெற்று வருகிறது, விரைவில் கண்டுபிடித்து தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
மாநிலத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சக்திகளை மாநில அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று தங்களுக்கு ஏற்கெனவே அரசு தரப்பிலிருந்து உத்தரவுகள் வந்திருப்பதாக கவுட் தெரிவித்தார்.
இந்து யுவ வாஹினி அமைப்பினர் அன்று மீரட், சாஸ்திரி நகரில் ஒரு வீட்டில் புகுந்து முஸ்லிம் ஆடவர் மற்றும் பெண் ஒருவரை இழுத்து வந்து போலீஸில் ஒப்படைத்த சர்ச்சையைத் தொடர்ந்து போஸ்டர் சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்து யுவவாஹினி அமைப்பினர் இதனை வீடியோவாக பதிவிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.