

நிலக்கரி சுரங்க முறைகேட்டில் பிரதமரை குற்றஞ்சாட்டுவது நியாயமற்றது என மத்திய அமைச்சர் மனிஷ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில்: ஒரு அமைச்சகத்தில், நிர்வாக தலைமை, அரசியல் தலைமை என இரண்டு இருக்கிறது.
நிர்வாகத் துறையில், அரசு அதிகாரிகள் எடுத்த ஒரு முடிவுக்கு பிரதமர் எப்படி பொறுப்பாக முடியும்?
அதுவும், ஷிபு சோரென் பதவி விலகிய பிறகு, இடைப்பட்ட காலத்தில் தான் பிரதமர் நிலக்கரி துறைக்கு பொறுப்பு அமைச்சராகிறார்.
நிலக்கரி சுரங்க படுகைகள் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்கள் பிரதமரிடம் வருவதற்கு முன்னரே அதை சம்பந்தப்பட்ட நிலக்கரி சுரங்க துறை அதிகாரிகளும் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளும் முற்றிலுமாக ஆராய்ந்து இருப்பார்கள்.
இத்தகைய நிலையில், கையெழுத்து போட்ட காரணத்திற்காக மட்டும் பிரதமரை குற்றஞ்சாட்டுவது நியாயமற்றது. இவ்வாறு மனிஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி.பரேக் கூறியிருந்தார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முடிவுகளில் எந்தத் தவறும் இல்லை. நாங்கள் நேர்மையாகவும் சரியாகவுமே முடிவுகளை எடுத்தோம். இதில் குற்றச்சதி இருப்பதாக சிபிஐ நினைப்பது ஏன் என்றே தெரியவில்லை.
இறுதி முடிவு எடுத்தவர் என்றவர் என்ற வகையில் நிலக்கரி சுரங்கத் துறை அமைச்சராகவும் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கும் குற்றச்சதி புரிந்தவரே. எனவே, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் குற்றச்சதி இருப்பதாக சிபிஐ கருதினால், பிரதமரையும் சேர்க்க வேண்டும். ஒரு குற்றச்சதி நடந்திருந்தால், அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே பங்கு இருக்கிறது அல்லவா?" என பரேக் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.